“இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மாட்டேன்” – வடிவேலு அதிரடி!

செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (10:41 IST)
‘இனிமேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மாட்டேன்’ என அதிரடியாகத் தெரிவித்துள்ளார் வடிவேலு.
சிம்புதேவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, இயக்குநர் ஷங்கர்  தயாரித்தார். அரசியலை நையாண்டியாகச் சொன்ன இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்றது.
 
எனவே, 10 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தை எடுக்கத் திட்டமிட்டனர். சில நாட்கள் ஷூட்டிங் வந்த  வடிவேலு, அதன்பிறகு வரவில்லை. எனவே, இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்தார் ஷங்கர்.
 
இந்நிலையில், நடிகர் சங்கத்துக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் வடிவேலு. அதில், ஒப்பந்தம் செய்த தேதிகளில் படத்தைத் தொடங்காமல், ஒப்பந்த காலம் முடிந்தபிறகு படத்தைத் தொடங்கியதாகவும், இருந்தாலும் அந்தப் படத்தில் சில நாட்கள் நடித்தேன் எனக் கூறியுள்ளார்.
 
மேலும், தன்னுடைய ஆஸ்தான காஸ்ட்யூம் டிசைனரை நீக்கியதோடு, தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தன்னைப் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கடிதம் கொடுத்தனர் எனவும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். இதனால், தனக்குப் பொருளாதார இழப்பு மற்றும் மன உளைச்சல்  ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்