வைரலாகும் ’சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாட்டு…” நினைவுகளைப் பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜின் வைரல் பதிவு!

செவ்வாய், 7 ஜூன் 2022 (08:48 IST)
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்த பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

1995 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற திரைப்படம் ‘அசுரன்’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாட்டு அப்போது பிரபலமான ஒன்றாக அமைந்தது. அந்த பாடலுக்கு மன்சூர் அலிகானின் வித்தியாசமான நடன அசைவுகள் கூடுதல் கவர்ச்சியை தந்தன. இந்த பாடலுக்கு ஆதித்யன் இசையமைத்திருந்தார். இயக்குனர் ஆர் கே செல்வமணி கதை எழுதி, வேலு பிரபாகரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் அருண் பாண்டியன், நெப்போலியன், ரோஜா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள விக்ரம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் இந்த பாடல் இடம்பெற்று இருந்தது. அதையடுத்து தற்போது யுடியூப் உள்ளிட்ட பலவேறு தளங்களில் இந்த பாடலை பலரும் தேடி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து சமூகவலைதளங்களில் இப்பொது அந்த பாடல் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்துள்ள தகவல் இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதில் “தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் விண்டேஜ் பாடலான ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலுக்கு இசையமைப்பாளர் ஆதித்யன் மெட்டமைக்க நான் ப்ரோகிராமிங் செய்தேன். இப்போது அந்த பாடல் கவனிக்கப்படுவதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்