இலவச மின்சார ரத்து – பிரதமருக்கு கடிதம் மூலம் எதிர்ப்புத் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி!

திங்கள், 18 மே 2020 (16:09 IST)
தமிழகத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதைக் கடுமையாக எதிர்ப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் கூறிய  ரூ.20 லட்சம்  கோடி  திட்ட  அறிவிப்புகள் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார நிதித்தொகுப்புகளை அறிவித்துள்ளார். அதில் எல்லா பொதுத்துறைகளிலும் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தில் ‘கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மாநிலங்களில் வருவாய் பெருமளவில் பற்றாக்குறையை சந்தித்துள்ளன. கொரோனா தடுப்புச் செலவுகள் மட்டுமின்றி மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவீனங்களும் உள்ளன. ஆகவே, பெறப்படும் மாநில அரசின் கடன், மாநிலங்களின் எதிர்கால வரி வருவாயிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். கூடுதல் கடன் தேவைகளுக்கு தேவையற்ற நிபந்தனைகளை இணைப்பது நியாயமற்றதாகத் தெரிகிறது. இதுபற்றி மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.

குறிப்பாக மின் விநியோகத்தில் செய்துள்ள சீர்திருத்தங்கள், அரசியல் ரீதியாக முக்கியமானவை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மேலும், மானியம் வழங்குவதை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யும் யோசனையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது எங்களுடைய நிலைப்பாடு என்பதால் மானியம் வழங்கும் விவகாரத்தை மாநில அரசுகளிடமே ஒப்படைத்து விட வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்