நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக பிரேமம் என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் இயக்கி சமீபத்தில் வெளியான கோல்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், மோசமான வசூலையும் பெற்றது.
இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் “அஜித் சார், நிவின் பாலியிடம் பிரேமம் படம் நன்றாக இருப்பதாகக் கூறியிருந்தார். அதன் பின்னர் நான் 8 ஆண்டுகளாக அவரை சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அது நடக்காததால் நான் நொந்து போய்விட்டேன். அஜித் சாரை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அந்த படம் குறைந்தது 100 நாட்களாக ஓடும் விதமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.