தமிழ் நடிகராக இருந்தாலும், பாலிவுட், ஹாலிவுட் என அசத்திக் கொண்டிருக்கிறார் தனுஷ். ஒவ்வொரு முடிவையும் நிதானமாக எடுக்கும் தனுஷ், நன்கு யோசித்த பிறகே அடுத்தடுத்த விஷயங்களில் ஈடுபடுகிறார். ‘விஐபி 2’வைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தில் நடிக்கும் தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகம் அடுத்த வருடம் தொடங்கும் எனத் தெரிய வந்துள்ளது. அதற்கான கதையை, இப்போதே எழுதிவிட்டாராம் தனுஷ். முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இன்ஜினீயராக நடித்துள்ள தனுஷ், மூன்றாம் பாகத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு சுய தொழில் செய்பவராக நடிக்கிறாராம்.
அதாவது, தமிழ்நாட்டு இட்லியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேடமாம். முதல் பாகத்தில் வேல்ராஜை வைத்து ஆழம் பார்த்த தனுஷ், மச்சினிக்காக இரண்டாம் பாகத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். ஆனால், மூன்றாம் பாகத்தை தானே இயக்கப் போகிறாராம் தனுஷ்.