கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி பட நாயகி!

புதன், 12 ஜூன் 2019 (22:12 IST)
இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதல்முதலில் வென்ற ஆண்டு 1983. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பாலிவுட்டில் '83 தி ஃபிலிம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.
 
இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ், ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கபில்தேவ் மனைவி கேரக்டரான ரூமி பாட்டியா என்ற சிறப்பு தோற்ற கேரக்டரில் நடிக்க பல முன்னணி நடிகைகள் பரிசீலனையில் இருந்தனர். தற்போது இந்த கேரக்டருக்கு தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் நடித்தவர் என்பதும் பாலிவுட், ஹாலிவுட்டில் பிரபல நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கபீர்கான் இயக்கி வரும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்ற இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் படமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்