மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

Senthil Velan

ஞாயிறு, 2 ஜூன் 2024 (12:14 IST)
இசையால் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைத்தாயின் தவப்புதல்வர் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மகள் பவதாரணியை இழந்த துக்கத்தில் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடப் போவதில்லை எனறு இசையமைப்பாளர் இளையராஜா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
 
வாழ்க்கை வரலாறு:
 
1943இல் தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இளையராஜாவின் இயற்பெயர் ராசையா. இவரின் இளைய சகோதரர்கள் கங்கை அமரன் மற்றும் மற்றும் ஆர்.டி.பாஸ்கர்.
 
சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றார். 1960களில் இவரின் மூத்த சகோதரான பாவலர் வரதராஜன் தலைமையில் இவரும், இதர சகோதரர்களும் ஏராளமான இசை கச்சேரிகள் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் பாடினர்.
 
1969ல் சென்னைக்கு தனது இளைய சகோதரர்களுடன் இடம் பெயர்ந்த இளையராஜாவிற்கு பாரதிராஜா ஆதரவளித்தார். தன்ராஜ் மாஸ்டரிடம் செவ்வியல் இசை பயிற்சி பெற்றார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
 
இசையமைப்பாளராக அறிமுகம்:
 
1976ல் அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி, பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. 1977ல் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் நாட்டுபுற இசையையும், மேற்கத்தைய இசையும் கலந்து அபாரமாக இசையமைத்து, பெரும் புகழ் பெற்றார்.
 
கர்நாடக இசையின் அடிப்படையில் கவிக்குயில் படத்தில் இவரின் இசையில் பால முரளி கிருஷ்ணா பாடிய பாடல் இன்று வரை பிரபலமாக உள்ளது. முதன் முறையாகத் தமிழ் திரைபடங்களில் ஸ்டீரியோ முறையில் ப்ரியா எனும் படத்திற்கு இசையமைத்து சாதனை படைத்தார்.

1980இல் பாரதிராஜாவின் நிழல்கள் படத்திற்கு இசையமைத்து, இசையமைப்பாளராகவே சில விநாடிகள் தோன்றிய தன் வரலாற்று பாடல். வறுமையின் நிறம் சிகப்பு படத்தில், மெட்டுக்கு பாட்டெழுவது பற்றிய இந்த பாடல் பெரும் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது.

புதுப் புது அர்த்தங்கள் படத்தில், இளையராஜா கம்போசிங் செய்யும் காட்சி இடம் பெற்ற ஹிட் பாடல், கே.பாலச்சந்தரின் சிந்துபைரவி பட பாடல்கள் அனைத்தும் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்தது. 

பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. 2005இல் திருவாசகத்திற்கு மேற்கத்திய ஒரட்டேரியா இசை வடிவில் இசையமைத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றார்.
 
40 வருடத்திற்கு மேலான இசைப் பயணத்தில் ஆயிரத்திற்கு அதிக படங்களில் சுமார் 7,000 பாடல்களுக்கு இசைமைத்து சாதனை படைத்த இளையராஜாவிற்கு 2018ல் மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இசைத்துறையில் ஏராளமான சாதனைகள் படைத்த இளையராஜாவுக்கு 2022ம் ஆண்டு மத்திய பாஜக அரசு எம்.பி. பதவி வழங்கியது. 
 
பிறந்த தினம் இன்று:
 
மேஸ்ட்ரோ, இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா இன்று 81வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த போஸ்டரை வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதேபோல் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 
பிறந்தநாள் புறக்கணிப்பு:
 
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளரிடம் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா,  எனது மகள் பவதாரணி இழந்த துக்கத்தில் நான் இருப்பதால், இன்று எனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்