ரஜினியை பங்கமாக கலாய்த்த 'கோமாளி' படக்குழு: பொங்கி எழுந்த ரசிகர்கள்!

ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (09:30 IST)
ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதைப்படி ஜெயம் ரவியின் கேரக்டர் 16 வருடங்கள் கோமாவில் இருந்த பின்னர்  எழுந்து வருவது போல் உள்ளடு. 16 வருடங்களுக்கு முந்தைய நினைவிலிருக்கும் ஜெயம்ரவியை இன்றைய நிலைக்குக் கொண்டுவர யோகி பாபு உள்பட அவருடைய நண்பர்கள் முயற்சி செய்வதும், அதனால் ஏற்படும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் கதை 
 
இதில் ஒரு காட்சியில் தற்போது 2016ஆம் ஆண்டு நடைபெற்று வருவதாக கூறி அதனை நிரூபிக்கும் வகையில் தொலைக்காட்சியை ஆன் செய்கிறார் யோகிபாபு. அப்போது அதில் ரஜினி தான் அரசியலுக்கு வர உள்ளதாக கூறும் செய்தி ஒளிபரப்பாகிறது. இதனை பார்த்த ஜெயம்ரவி 'யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், இது 2016 அல்ல 1996 என்று கூற' இந்த காட்சி பெரும் காமெடியாக மாறியுள்ளது 
 
ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். சுமார் 23 வருடங்கள் ஆகியும் அவர் இன்றுவரை அரசியலுக்கு வருவதை உறுதி செய்யவில்லை. இதனை அடுத்து அவரை பங்கமாக கலாய்க்கும் விதமாகவே இந்த காட்சியை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பொங்கி எழுந்து வருகின்றனர். ஜெயம் ரவியின் கோமாளி படக்குழுவினருக்கு ரஜினி ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் மூலம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் 
 
நடிகர்கள் அரசியலுக்கு வருவது முக்கியமல்ல, வந்தால் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். அரசியலுக்கு அவசரப்பட்டு வந்த சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், டி ராஜேந்தர், பாக்யராஜ், சிரஞ்சீவி, கமல்ஹாசன்  உள்பட பல நடிகர்கள் தோல்வியையே சந்தித்துள்ளனர் . இதனால் தகுந்த நேரம் காலம் பார்த்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, குறித்த நேரத்தில் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று கேட்பது முட்டாள்தனம்' என ரஜினி ரசிகர்கள் 'கோமாளி' படக்குழுவினர்களுக்கு பதில் அளித்து வருகின்றனர்'

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்