30 வருடங்களுக்கு முன்பு அதாவது, 80களில் குணச்சித்திர வேடங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஆவார். அதேபோல், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் தனக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் ஜனகராஜ்.
ஆனால், நடிகர் ஜனகராஜ், கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு, அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் செட்டில் ஆகி விட்டார். சாருஹாசன் மட்டும் அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் சினிமாவில் தலை காட்டி வருகிறார்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘தாதா 87’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாருஹாசன் தாதா வேடத்திலும், ஜனகராஜ் ஓய்வு பெற்ற அதிகாரி வேடத்தில், கதாநாயகியின் தந்தையாக நடிக்கிறார்.