பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ராஜாசாப் படத்துக்காக இணைந்துள்ளார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் படமாக ராஜாசாப் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாததால் ரிலிஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்போது டிசம்பர் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தைத் தயாரித்திருக்கும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் மீது படத்துக்கு முதலீடு செய்த IVY எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதில் “ஒப்புக்கொண்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடித்து வெளியிடுவது மற்றும் நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையை தயாரிப்பு நிறுவனம் மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த படத்துக்கு நாங்கள் முதலீடு செய்த தொகையை (218 கோடி ரூபாய்) 18 சதவீத வட்டியுடன் எங்களுக்குத் திருப்பித்தர உத்தரவிடவேண்டும்” எனக் கூறியுள்ளது. இதனால் படம் அறிவிக்கப்பட்ட தேதியில் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.