வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்படது. பல தடைகளுக்குப் பிறகு ஒருவழியாக ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்புக்காக நவின் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒளிப்பதிவு சாதனங்கள் வாடைகைக்கு எடுத்த வகையில் அவர்களுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பாக்கிவைத்துள்ளதாகவும், அதை தராமல் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் பார்த்திபன் இறங்கியுள்ளதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஸ்கர ராவ் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது சம்மந்தமாக பதிலளிக்க சொல்லி நீதிமன்றம் பார்த்திபனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.