மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வையுங்கள்: மன்சூர் அலிகானுக்கு பாரதிராஜா அறிவுரை..!

செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:20 IST)
மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வையுங்கள் என மன்சூர் அலிகானுக்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதிராஜா அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சினிமா துறையில் சக கலைஞர்களை மதிப்பது மிகவும் அவசியம். பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
 
இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை. சில மேடைகள்...சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாரிகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது. நடிகர் மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.
 
இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில், தானாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.
 
மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள... உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக்கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம். கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, வலைதளங்களில் வைரலாகும் நோக்கோடு அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்”
 
இவ்வாறு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்