வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுத்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் இசை விழா வரும் மே 1 ஆம் தேதி சென்னை தீவுதிடலில் நடக்கிறது.
பாரதிராஜாவின் அழைப்பு…
இது சம்மந்தமாக இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் படைப்புகளால் மக்களுக்கு இன்பச் சாமரம் வீசும் கலைஞர்கள் இங்கு இருப்பது தமிழ் சினிமாவின் வரம். அதிலும், தமிழ் சினிமாவை சிரசிலேந்தி பாரெங்கும் பரப்பும் திறன் மிகு நாயகர்கள் வாய்த்திருப்பது வரத்திலும் வரம். அப்படியான வரத்திலும் வரமான ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானும், ஆர். பார்த்திபனும் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்கி நம் முன் விருந்து படைக்கின்றனர்.
இரவின் நிழல் என்ற அப்படத்தை என்னைக் காணச் செய்த பார்த்திபனுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மனதை கொள்ளை கொள்ளும் நிழலைக் கண்டேன். மனம் நிறைந்தேன். அப்படைப்பின் இசை நாயகனின் பயணத்தைக் கொண்டாடும் விதமாக மே 1ஆம் தேதி விழா தீவுத்திடலில் நடக்கிறது. என் சார்பாக திரைத்துறையினர் அனைவரையும் அழைக்கிறேன். வாருங்கள். நீங்கள் கலந்துகொள்வதே இக்கலைஞர்களைக் கவுரவிப்பதற்கும் பெருமைப்படுத்துவதற்கும் சமம். வந்து கலந்து இக் கலைஞர்களின் பணியை பெருமிதம் கொள்ளச் செய்வோம்.
மே 1 திரைத்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவாக அவ்விழா அமையச் செய்ய மூத்த கலைஞன் என்ற முறையிலும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேசன் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.