அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பு நாட்களின்போது நடிகர் அஜித் ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள்.
ஒரு கை விரல்களில் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையில் தான் அஜித்தின் திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அஜித் என்பவர் ஒரு நடிகர் என்கிற ஒற்றை விவரிப்பில் அவரை அடக்கி விடமுடியாது என்பது எங்கள் உரையாடல்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. குடும்பக் கதைகளும் சேர்ந்து கொள்ள, உணவும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் எல்லோரும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம்
எங்களுடைய ஏதோ ஒரு குடும்ப நிகழ்ச்சி விவரிப்பின் போது அஜித் உட்பட எல்லோரும் குலுங்கி குலுங்கிச் சிரித்தபோது, வைதேகியும் நானும் எங்கள் உரையாடல்களுக்கு டிக்கெட் போடலாம் என்று அடிக்கடி எழும் எண்ணம் மீண்டும் வந்தது. ஆர்வத்துக்காக ஒரு புது விஷயத்தைச் செய்து பார்ப்பதன் மகிழ்ச்சி, வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் மனநிலை மாறுவது, பைக், கார், சைக்கிள் பயணங்கள் என்று உடலும் மனமும் இணைந்து செயல்படும் தருணங்களின் அனுபவம் என்று இயல்பான போக்கில் போனது பேச்சு.