”உங்களுக்கு இந்த பொண்ணா மனைவி?” – கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்!

ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (12:41 IST)
சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன் திருமண புகைப்படங்கள் வெளியாகி கிண்டலுக்கு உள்ளான நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார் நடிகர் அசோக் செல்வன்.



தமிழ் சினிமாவில் சூது கவ்வும் போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி தெகிடி, ஓ மை காட், போர் தொழில் என பல ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். ஹேண்ட்சமாக உள்ள அசோக் செல்வன் மீது பல பெண்களுக்கும் மையல் உண்டு.

இந்நிலையில்தான் சமீபத்தில் அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தார். தமிழ் நடிகர் அலெக்ஸ் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழில் வெளியான தும்பா படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சில பெண்கள் கமெண்ட் செக்‌ஷனில் வந்து அசோக் செல்வன் ஏன் இந்த பெண்ணை திருமணம் செய்தார் என கீர்த்தி பாண்டியனின் நிறத்தை வைத்து கிண்டல் செய்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

பலரும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி கருத்து தெரிவிக்க தொடங்கினர். இந்நிலையில் அசோக் செல்வன், கீர்த்தியுடன் இருக்கும் புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அதில் “உலகின் மிக அழகான பெண்ணோடு” என சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கீர்த்தியின் அழகு குறித்து விமர்சித்தவர்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் அசோக் செல்வன்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்