ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த கேம்சேஞ்சர் திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எழுந்த எதிரமறையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் பட்ஜெட்டில் 50 சதவீத வசூலைக் கூட படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஷங்கர் படம் பற்றி பேசும்போது “இப்போதைய பார்வையாளர்களின் படம் பார்க்கும் திறன் குறைந்துவிட்டது. அவர்கள் சினிமாவை விட ரீல்ஸ்களை அதிகமாக பார்க்கிறார்கள். அதை மனதில் வைத்துதான் கதையை எழுதினேன். “ என்று கூறியிருந்தார். இந்த கருத்தை பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார். அவர் “ரசிகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் ஆகிவிடவில்லை என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.