சிக்கிடான்யா... சிம்பு படத்திற்கு சிக்கல்!!

வியாழன், 19 நவம்பர் 2020 (13:02 IST)
ஈஸ்வரன் பட போஸ்டர் மற்றும் ட்ரைலரை உடனே நிறுத்துமாறு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக சிம்பு ஷூட்டிங் ஒழுங்காக வருவதில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், வெளியான சில படங்களும் சரியாக ஓடாததால் சிம்புவின் கெரியர் முடிந்து விட்டதா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில் மிகப்பெரிய கம்பேக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிம்பு.
 
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “ஈஸ்வரன்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. உடலை நன்றாக குறைத்து பழைய ஸ்லிம் சிம்புவாக டீசரில் தோன்ற, அதற்காகவே ரசிகர்கள் அந்த டீசரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் பல சர்ச்சைகளுக்கு உள்ளான “மாநாடு” படத்தின் பணிகளும் ஏறத்தாழ முடிந்துவிட்டன.
 
இந்நிலையில் அடுத்ததாக மாநாடு படத்தின் டீஸர் வெளியீடு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் சிம்பு. நவம்பர் 21 ஆம் தேதி காலை 10.44க்கு மாநாடு படத்தின் டீசர் வெளியாவதாக சிம்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
 
அடுத்தடுத்து சிம்பு படங்களில் அப்டேட் வந்து கொண்டிருப்பதால் பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்த சிம்பு ரசிகர்கள் திடீரென தோன்றி சமூக வலைதளங்களில் சிம்புவை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். 
 
ஆனால் சிம்புவிற்கு தற்போது புதிய பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது, ஈஸ்வரன் பட போஸ்டர் மற்றும் ட்ரைலரை உடனே நிறுத்துமாறு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பாம்பு பயன்படுத்தப்பட்டது தொடர்பாக தடையில்லா சான்று பெறவில்லை. எனவே, 7 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்