1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் ரஹ்மான் கிட்டத்தட்ட தனது திரையுலக வாழ்க்கையில் 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.
தற்போது தமிழ், மலையாளத்தையும் தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார் ரஹ்மான். ஹிந்தியில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கண்பத் திரைப்படம் வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் டைகர் ஷெராப், கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர், விகாஸ் பால் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்தும் தனது திரையுலக பயணம் குறித்தும் அடுத்தடுத்த தனது படங்கள் குறித்தும் பத்திரிக்கையாளர்களிடம் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார் நடிகர் ரஹ்மான்.
“1983ல் பள்ளி தேர்வை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்த நேரம் என்னை அழைத்துச்செல்ல வந்த பெற்றோருடன் கூடவே மலையாள இயக்குனர் ஒருவரும் வந்தார். சினிமாவில் நடிக்கிறாயா என கேட்டார். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான், நான் சினிமாவில் நடிப்பது போல ஒரு கனவு கண்டிருந்தேன். அந்த கனவு நனவான தருணம் போல கூடெவிடே படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததில்லை. எலக்ட்ரானிக் என்ஜினியர் ஆகவேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. அதன்பிறகு நடிப்புதான் உலகம் என மாறியது.