நடிகர் சங்க தேர்தல் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இந்த தேர்தலை நடத்த எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி முதலில் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மறுத்துவிட்டது. இந்த பிரச்சினை முடியும் முன்னே 61 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, பதவிக்காலம் முடிந்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தல் நடத்தாதது என்று பல்வேறு பிரச்சினைகள் கிளம்பின. இதனால் தேர்தல் நடத்துவதில் மேலும் சிக்கல் அதிகரித்தது.
இதற்காக நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நாளை தேர்தல் நடத்தி கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டாலும் தேர்தல் நடத்தக்கூடிய இடத்தை உடனே தேர்வு செய்தாக வேண்டும், காவல்துறை அனுமதி பெற வேண்டும், நடிக, நடிகையருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இவ்வளவும் இன்றைக்கு ஒருநாளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பது இயலாத காரியம்.