சுரேஷின் தமிழ் விரோத பேச்சு - பதிலடி தந்த ராஜமௌலி

செவ்வாய், 7 ஜூலை 2015 (10:31 IST)
நடிகர் சுரேஷ் நடிகராக அறியப்படுவதற்கு காரணமாக இருந்தது தமிழ் சினிமா. திரையுலகிலிருந்து முற்றாக விலக்கப்பட்ட நிலையில் சின்னத்திரையில் அவருக்கு இடம் தந்ததும் தமிழ் தொலைக்காட்சிகள்தான். இந்த நன்றிக்கடனை அவர் சமீபத்தில் செவ்வனே திருப்பிச் செலுத்தினார்.
ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நாசர், சத்யராஜ் போன்ற தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். இதனை மனதில் வைத்து, பாகுபலியை நான் ஆதரிக்கப் போவதில்லை. ஆந்திராவில் சாய்குமார் போன்ற சிறந்த நடிகர்கள் இருக்கும்போது பிறமொழி நடிகர்களை நடிக்க வைத்ததை ஏற்க முடியாது என்ற தொனியில் சுரேஷ் ட்விட் செய்திருந்தார். சுரேஷின் இந்த பதிவுக்குப் பிறகுதான் பெரும்பாலான தமிழர்களுக்கு அவர் தமிழரல்ல தெலுங்கர் என்ற விவரமே தெரிய வந்தது.
 
ஆந்திராக்காரர்கள்தான் தெலுங்குப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற மொழி வெறி மற்றவர்களுக்கும் இருந்திருந்தால் தெலுங்கரான இவர் தமிழ்ப் படத்தில் நடித்திருக்க முடியுமா?
 
சுரேஷின் நன்றி கெட்ட பேச்சுக்கு ராஜமௌலி தக்க பதிலடி தந்துள்ளார்.
 
எனக்கு நடிகர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி என்றெல்லாம் பிரிக்க தெரியாது. ஒரு இயக்குநராக என்னுடைய பாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று பார்ப்பது எனது பணி, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக எல்லாம் நான் கவலைப்பட முடியாது என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்