மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. 350க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் கமர்ஷியல் மற்றும் கதையம்சமுள்ள பரிச்சாட்தமான படங்கள் என மாறி மாறி நடித்துக் கவனம் ஈர்த்து வருகிறார். 73 வயதாகும் அவர் தற்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ரமலான் மாதம் என்பது மம்மூட்டி நடிப்பில் இருந்து விலகி நோன்பு இருந்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னால் சில மலையாள ஊடகங்களில் மம்மூட்டிக்குப் புற்றுநோய் என தகவல்கள் பரவி பீதியைக் கிளப்பின. ஆனால் அதை மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். நோன்புக்காலம் முடிந்ததும் மம்மூட்டி விரைவில் சினிமாவில் நடிப்பார் என சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது மம்மூட்டி சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மம்மூட்டியின் நெருங்கிய நண்பரான நடிகர் தம்பி ஆண்டனி முகநூல் பதிவில் “ 50 வயதைத் தாண்டிய ஒவ்வொருவரும் கோலன்கோபி சோதனை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு மூலமாக இதைக் குணப்படுத்தலாம். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட பலரும் அதன் பின்னர் 20 ஆண்டுகள் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். நமது மம்மூக்காவும் சிகிச்சைப் பெற்று மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வருவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.