பாகுபலி ஒரு சிறந்த படம்..ஆனால்? - வாய் திறந்த கமல்ஹாசன்
சனி, 13 மே 2017 (10:21 IST)
பாகுபலி படம் பற்றி முதல் முறையாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தின் முதல் பாகம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றதால், அதன் அடுத்த பாகம் சமீபத்தில் வெளியானது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூலாகி, அந்த படமும் வசூல் ரீதியாக பெரும் சாதனை படத்தை வருகிறது.
இந்த படத்தை பற்றி ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் உட்பட பல முக்கிய சினிமா பிரபலங்கள் பாராட்டி வரும் வேளையில், நடிகர் கமல்ஹாசன் இந்த படம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் இந்த படம் பற்றி செய்தியாளர்களிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன் “ பொருளாதார ரீதியாக பார்த்தால் பாகுபலி ஒரு சிறந்த படம். ஆனால், அந்த படத்தின் பிரமாண்டம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில்தான் இருக்கிறது. அப்படக்குழுவினரின் கடின உழைப்பு அதில் தெரிகிறது. அதுவே ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கிறது. ஆனால், அதற்காக நாங்கள் ஹாலிவுட்டிற்கு இணையாக, இல்லை அதை தாண்டி செல்வோம் எனப் பேசுவதை நிறுத்தி வையுங்கள். நாம் செல்ல வேண்டியது தூரம் இன்னும் இருக்கிறது.
மிகச்சிறந்த கலாச்சாரத்தையும், சிறந்த கதைகளையும் நாம் கொண்டிருக்கிறேம் என்பதை பாகுபலி படம் நிரூபித்துள்ளது. ஆனால், நம்முடைய கலாச்சாரம் 2 ஆயிரம் முந்தியது அல்ல. அது வெறும் 70 வருட கலாச்சாரம்தான்.
சந்திரகுப்த மௌரிய, அசோகர் என இன்னும் நாம் பழங்கதைகளை பேசிக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் நம்முடைய மூதாதையர்கள் அல்ல. அவர்களின் வாழ்க்கையை நாம் பின்பற்ற முடியாது. நாம் நிகழ்காலத்திற்கும், கடந்த காலத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கிறோம்.
பாகுபலி படத்தின் வெற்றி காரணமாக, சரித்திர படங்களின் மீது திரையுலகின் தாகம் திரும்பும்” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.