சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி தொடரின் கதையை தன்னிடமிடமிருந்து சுந்தர். சி பெற்றுக்கொண்டு பணம் தர மறுப்பதாகவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் நடிகர் வேல்முருகன் புகார் அளித்துள்ளார்.
உதவி இயக்குனராக பணிபுரிந்த வேல் முருகன், தமிழில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது “நந்தினி தொடருக்கான கதை என்னுடையது. சுந்தர் சி. என்னுடைய 15 வருட நண்பர். அந்த கதையை என்னிடம் கேட்டார். அதற்கு ரூ.50 லட்சம் தருவதாகவும், தொடர்ந்து திரைக்கதை எழுதுவதற்கு மாதம் ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறினார். எனவே, அவரை நம்பி என்னுடையை கதையை கொடுத்தேன்.
அதன் பின் மாதம் ரூ.1 லட்சம் எனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார். ஆனால், கடந்த 5 மாதங்களாக எனக்கு பணம் வரவில்லை. அதேபோல், எனக்கு கொடுப்பதாக கூறிய ரூ.50 லட்சத்தையும் கொடுக்கவில்லை.
அதுபற்றி கேட்டால், அந்தக் கதைக்கான பணம் அவ்வளவுதான் என்கிறார். மேலும், அடியாட்களை வைத்து என்னை மிரட்டுகிறார். அவரை நம்பியே அந்த கதையை கொடுத்தேன். எந்த கோவிலுக்கும் எனது குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்கிறேன்.