பெப்சிக்கு போட்டியாக புதிய அமைப்பா? நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை..!

Siva

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (08:14 IST)
தனுஷ் மற்றும் பைவ் ஸ்டார் நிறுவனத்தின் விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெப்சி அமைப்புக்கு போட்டியாக இன்னொரு புதிய அமைப்பு தொடங்கப்பட ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழ் சினிமா கடந்த மூன்று மாதங்களில் 72 திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் 5 படங்கள் தவிர மற்ற அனைத்தும் தோல்வி படங்களே.
 
பல திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்களின் மொத்த முதலீட்டையும் இழந்து, அவர்களுக்கு எவரின் ஆதரவும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
 
நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காக்க, நமது இரு சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது இந்த கடுமையான சூழ்நிலையில் அவசியம்.
 
சினிமாத்துறை தற்போது உள்ள மோசமான சூழ்நிலையில், பெரிய முதலீட்டு படங்கள் மட்டுமல்லாது, சிறு முதலீட்டுப் படங்களும் பயனடையும் வகையில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, FEFSI-யுடன் இணைந்து, ஒரு JAC (Joint Action Committee) குழுவை அமைத்து அனைத்து சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ் சினிமாவில் தற்போது தேவைப்படும் மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று கருதுகிறோம்.
 
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கான முக்கிய வழிகளை நமது இரு சங்கங்களும் உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில், இன்னொமொரு தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முயற்சிப்பது எந்த வகையிலும், தமிழ் சினிமாவுக்கு பயன் தராது.
 
அதற்கான தேவையும் இல்லை. அது நமது செயல்பாடுகளை திசை திருப்பி விடும். நம் இரு சங்கங்களும் FEFSI-யுடன் இணைந்து, தேவைப்படும் மாற்றங்களை கொண்டுவருவதே, விரைவான மாற்றங்களுக்கு வழி என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்