துணை முதல்வரில் மலையாளப் பெண்ணாக நடிக்கும் ஸ்வேதா மேனன்

சனி, 21 ஜூன் 2014 (14:58 IST)
பாக்யராஜ், ஜெயராம் நடிக்கும் துணை முதல்வர் படத்தின் புகைப்படம் ஒன்றில் ஸ்வேதா மேனன் கேரள ஸ்டைலில் முண்டுடுத்தி வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து காட்சியளிக்கிறார். தமிழில் ஸ்வேதா மேனன் என்றால் கவர்ச்சி நடிகை. அதற்காக தமிழ்ப் படத்திலும் அவரை கேரள ஸ்டைலில் கவர்ச்சியாக காட்ட வேண்டுமா?
இந்தக் கேள்விகளுடன் அணுகினால் படத்தின் இயக்குனர் விவேகானந்தன் சொல்லும் பதில் வேறு விதமாக இருக்கிறது.
 
கதைப்படி ஒரு கிராமத்தின் அரசியல் பிரமுகர் பாக்யராஜ். அவரது நண்பர் ஜெயராம். கிராமத்துக்கு நன்மை செய்யும் இரண்டு நல்ல உள்ளங்கள் இவர்கள். ஒருமுறை கேரளா செல்லும் போது அங்குள்ள கிராமத்துப் பெண் ஸ்வேதா மேனனுக்கு பாக்யராஜின் கேரக்டர் மீது காதல் ஏற்பட்டு அவரை கல்யாணம் செய்து கொள்கிறார். ஆம், ஸ்வேதா மேனன் இந்தப் படத்தில் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள மலையாளியாக நடித்துள்ளார். அதனால்தான் அந்த முண்டு, ஜாக்கெட் கெட்டப்.
 
அரசியல் நையாண்டிப் படமான இதில் ஜெயராமுக்கு ஜோ‌டி சந்தியா. இவர்களின் காதல் கைகூட பாக்யராஜ் உதவி செய்வது படத்தில் பிரதானமாக வருகிறது. அரசியல் கட்சிகள் யாரையும் நோகடிக்காமல் மக்களை சிரிக்க வைக்கும் அரசியல் நையாண்டிப் படமாக துணை முதல்வர் தயாராகி வருகிறதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்