பத்மினிதான் படத்தோட ஹீரோ - விஜய் சேதுபதி

புதன், 5 பிப்ரவரி 2014 (10:52 IST)
ரம்மி படத்தின் தோல்வியை விஜய் சேதுபதி ஏற்கனவே கணித்திருப்பார் போல. படத்தை குறித்து பாஸிடிவ்வாக அவர் சொன்ன ஒரு துணுக்குக்கூட இல்லை. ரம்மிக்கும் சேர்த்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை கொண்டாடுகிறார். படத்தைக் குறித்து பேசும் போதே நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அருவியாக கொட்டுகிறது விஜய் சேதுபதியிடம்.
FILE

பண்ணையாரும் பத்மினியும் உங்களை ரொம்பவே கவர்ந்திருப்பது தெரிகிறதே...?

எல்லாப் படமுமே ஆத்மார்த்தமா பிடிச்சுதான் பண்றேன். ஆனா என்னன்னு தெரியலை இந்தப் படம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தது. அதுக்கு என் நண்பன் அருண் குமாருக்கு நன்றி சொல்லணும். பொதுவா நமக்கு பச்சை பசேல்னு பார்க்கும் போது ப்ரெஷ்ஷான ஃபீல் கிடைக்கும். அந்த மாதிரி மனுசனுக்குள்ளேயுள்ள நல்ல நெகிழ்வான சம்பவங்களை வச்சு செய்த அழகான ஸ்கிரிப்ட்தான் பண்ணையாரும் பத்மினியும்.
FILE

கதையை கேட்ட உடனே நிறைய இடங்கள்ல... ஆனந்த பெருக்குன்னு சொல்வோமே அது ஏற்பட்டுது. அருண் எக்ஸலென்டான ஸ்கிரிப்ட் ரைட்டர். உறவுகளுக்குள் உள்ள ஆழத்தை ரொம்ப அருமையா சொல்லியிருக்கிறார். இந்தப் படம் எனக்குக் கிடைச்சதை பெரிய பாக்கியம்னு நினைக்கிறேன்.

காதல் கதையா...?

ஒரு அழகான கிராமத்துல உள்ள நல்ல மனுஷங்களை சுத்தி நடக்கிற சுவாரஸியமான விஷயங்கள்தான் இந்தப் படம். காதல் சார்ந்து இல்லாம பண்ணையார் அவரோட கார், அதை ஓட்டுற முருகேசன்ங்கிற கேரக்டர், பண்ணையாரம்மா இவங்களுக்குள்ள நடக்கிற சின்ன ப்ளேதான் படமே. துளிகூட நெகடிவ் எனர்ஜி இல்லாத ரொம்ப பாஸிடிவ்வான படம். மொத்தமா சொல்றதுன்னா பண்ணையாரும் பத்மினியும்ல கெட்டவங்களே கிடையாது.
FILE

தயாரிப்பாளர் என்ன சொன்னார்?

தயாரிப்பாளர் கணேஷ் சார் எதுவுமே சொல்லலை. கதையை கேட்டதும் உங்க இரண்டு பேருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு படத்தை எடுத்துக் குடுங்க, அதுபோதும்னு சொல்லிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கிறேன்.

படத்தில் பிரதானமாக வரும் பத்மினி காரைப் பற்றி...?

அது கார் கிடையாது. படம் தொடங்கி பத்து சீன் போனதுமே அதுதான் படத்தோட ஹீரோவா தெரியும். ஸோ, பத்மினிதான் படத்தோட ஹீரோ. இந்த காரை முதல்லயே நான் புக் பண்ணிட்டேன். படம் முடிஞ்சதும் இந்தக் காரை நான் எடுத்துப்பேன் யாருக்கும் தர மாட்டேன்னு சொல்லிட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச கார் இது.
FILE

பண்ணையாராக வரும் ஜெயப்பிரகாஷ்...?

கதையை கேட்கும் போதே பண்ணையாராகவும், பண்ணையாரம்மாவாகவும் யார் நடிக்கப் போறாங்கன்னு பேசிகிட்டோம். எங்க இரண்டு பேரோட சாய்ஸாகவும் இருந்தது ஜே.பி. சார்தான். சூப்பரா பண்ணியிருக்காங்க. அதே மாதிரி துளசியம்மா. அவங்களோட உனக்காகப் பிறந்தேன் சாங்கை நான் அவ்வளவு ரசிச்சேன். அந்த சாங்கை முழுக்க வீட்லதான் எடுத்தாங்க. ஆனா ஒரு இடத்துலகூட போரடிக்கலை. எப்படி ஷாட் வச்சாங்க எப்படி எடுத்தாங்கங்கிறது பிரமிப்பா இருக்கு.

ஒளிப்பதிவாளர் கோகுல்...?

இந்தப் படத்தில் எல்லோரும் நல்லவங்க. அதுக்கேத்த மாதிரி சீன்ல ஒரு ஃபீல் கொண்டு வந்திருக்கார். படத்துல நடிச்ச எல்லோரையுமே ரொம்ப அழகா காட்டியிருக்கார்.
FILE

படத்தில் நடித்த பிற நடிகர்கள்...?

ஐஸ்வர்யா ஏற்கனவே ரம்மியில என்கூட நடிச்சிருக்காங்க. இதுலயும் பிரமாதமா பண்ணியிருக்காங்க. நீலிமா நடிச்சிருக்காங்க. படத்துல ஒரு திருப்புமுனை ஏற்படுத்துற கேரக்டர். நல்லா பண்ணியிருக்காங்க. அப்புறம் தினேஷ் நடிச்சிருக்கான். நான் கூப்பிட்டதுக்காக வந்து நடிச்சு கொடுத்தான். இந்தப் படம் கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்