இனவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும்

திங்கள், 7 செப்டம்பர் 2015 (05:54 IST)
இலங்கையில் இனவாதக் கருத்துக்களை கூறி அதன் அடிப்படையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புகளை தடை செய்ய அரசாங்கம் தயங்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனவாத செயற்பாட்டை முன்னெடுக்கும் அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் இனமத பேதமின்றி தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தேசியக் கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நாட்டின் புதிய அரசாங்கம் இனவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவிர மதவாதத்தை எவ்வகையிலும் சகித்துக் கொள்ளாது எனவும் அவர் கூறினார்.

தேசிய நல்லிணக்கத்துக்கான ஐக்கியத் தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமைய கட்சி கூட கடந்த காலங்களில் வெளிப்படுத்திய கருத்துக்களிலிருந்து விடுபட்டு செயற்பட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

எனினும், அரசின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்திற்குள்ளேயும் வெளியேயும் யாராவது தீவரவாத, இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு தக்க பதில் அளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கிலான அரசின் கொள்கைத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்