கிழக்கிலங்கையில் தொடரும் மீனவர் போராட்டங்கள்

சனி, 27 பிப்ரவரி 2016 (18:46 IST)
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் மீனவர்கள் வெளி மாவட்ட மீனவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 

 
திருகோணமலை மாவட்டம் குச்சைவெளி பிரதேச மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை புல்மோட்டை சந்தியில் ஆரம்பித்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 3வது நாளாகவும் தொடர்கின்றது.
 
வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்தும் பருவ காலங்களில் வருகை தந்து அதிநவீன உபகரணங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கடந்த வருடமும் இதே காலப் இந்த பிரச்சினை எழுந்த போது இந்த வருடம் முதல் அவர்கள் அப்படி அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரிகளினால் மீனவ அமைப்புகளுக்கு எழுத்து மூலம் உறுதி மொழியும் உத்தரவாதமும் வழங்கப்பட்ட போதிலும் அது செயல் வடிவம் பெறவில்லை என்றும் மீனவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
 
வெளிமாவட்ட மீனவர்களின் வருகைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
வெளி மாவட்ட மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
 
தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதேவேளை திருகோணமலை புல்மோட்டையில் போராட்டத்தில் கலந்து கொண்ட உள்ளுர் மீனவர்களின் இரு படகுகள் அடையாளந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்