தோழிகளில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்?

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இரண்டு ரஷ்ய வீராங்கனைகளான தினாரா சஃபீனாவும், ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவும் மோதுகின்றனர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபுல்கோவாவை 6- 3, 6- 3 என்ற செட்களில் எளிதில் தினாரா சஃபீனா வீழ்த்த குஸ்னெட்சோவா, ஆஸ்ட்ரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசரை 6- 4, 6- 7, 6- 3 என்ற செட்களில் வீழ்த்த போராடினார்.

2004ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மிஸ்கினாவும், எலெனா டீமென்டீவாவும் மோதிய பிறகு தற்போது இரண்டாவது முறையாக் இரண்டு ரஷ்ய வீராங்கனைகள் பிரெஞ்ச் ஓபன் இறுதியில் மோதுகின்றனர்.

இது வரை ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் கூட வென்றிராத சஃபீனா தற்போது உலகத் தரவரிசையில் முதலிடம் வகிப்பது குறித்து விமர்சகர்கள் பலர் ஒன்றாம் நிலைக்கு இவர் தகுதியற்றவர் என்று கூறி வந்துள்ளனர். எனவே இந்த முறை அவர் பட்டம் வெல்வதில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஸ்னெட்சோவா 2006ஆம் ஆண்டு ரோலாண்ட் கேரோஸ் இறுதியில் ஜஸ்டின் ஹெனினிடம் இறுதியில் தோல்வி தழுவினார். ஆனால் சஃபீனா போல் அல்லாமல் குஸ்னெட்சோவா 2004ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஒன்றை வென்ற பெருமையை பெற்றவர்.

நெருங்கிய தோழிகளில் யார் யாரை வீழ்த்துவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்