பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவு இறுதிப் போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தையும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் தனிநபர் பிரிவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வெல்லும் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அர்ஷத் நதீம். அதுமட்டுமில்லாமல் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் பாகிஸ்தானியரும் இவர்தான்.
பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப்பில் உள்ள மியான் சன்னு என்ற ஊரில் கட்டிடத் தொழிலாளியான முகமது அஷ்ரப்பிற்கு 3 ஆவது குழந்தையாக பிறந்தவர் அர்ஷத். சிறுவயது முதலே பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்த அர்ஷத், கிரிக்கெட்டர் ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம்.
விளையாட்டுத்துறை அதிகாரியான ரஷீத் அஹ்மாத் சாகி, என்பவர்தான் அர்ஷத்தைப் பார்த்து அவரை ஈட்டி எறிதலில் கவனம் செலுத்துமாறு திசைமாற்றியுள்ளார். அப்படிதான் ஈட்டி எறிதலில் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார் அர்ஷத். சிறப்பாக விளையாடிய அவருக்கு 2015 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சார்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.