சிஎஸ்கே தோத்ததுக்கு இவங்கதான் காரணம்! – ஓப்பனாக பேசிய தோனி!

வியாழன், 13 ஏப்ரல் 2023 (10:51 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் சிஎஸ்கே மோதிய நிலையில் தோல்வியை தழுவியது. தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. 176 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் பலவீனமானது.

ஓப்பனிங் ப்ளேயரான ருதுராஜ் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து வந்த கான்வே, ரஹானே இருவரும் நின்று விளையாடி அணியின் ரன் ரேட்டை அதிகப்படுத்தினர். ஆனால் அவர்கள் விக்கெட்டுக்கு பிறகு அணியின் நிலை மோசமானது. ஷிவம் தூபே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு என அனைத்து மிடில் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகினர்.

பின்னர் ஜடேஜா, தோனி இருவரும் சேர்ந்து அதிரடியாக ஆடி அணியின் ரன்ரேட்டை தொடர்ந்து உயர்த்தினர். கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் தோனியால் சிங்கிள்ஸ் மட்டுமே ஈட்ட முடிந்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் அணி தோல்வியை தழுவியது. மிடில் ஆர்டரில் விளையாடிய தூபே, மொயீன் அலி உள்ளிட்டவர்கள் பவுண்டரி, சிக்ஸ் அடிக்க முயன்ற அளவு சிங்கிள்ஸ் ஓடாமல் இருந்ததே அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து பேசிய கேப்டன் தோனி “மைதானம் பெரிய அளவில் ஸ்பின்னர்களுக்கு உதவவில்லை. ராஜஸ்தான் அணியில் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். சென்னை அணி மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யாததே தோல்விக்கு முக்கிய காரணம்.

சென்னை அணி பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். பேட்ஸ்மேன்கள்தான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். கேப்டனாக எனக்கு 200வது போட்டி என்ற சாதனை நிகழ்வுகளை எல்லாம் நான் பெரிதாக கருதுவதில்லை” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்