நியுசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று தொடங்கிய 4 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நிதானமாக பேட் செய்த இந்திய அணிக்கு ஆறாவது ஒவரில் இருந்து சரிவு ஆரம்பித்தது. டிரண்ட் போல்ட் வீசிய 6 ஆவது ஓவரின் கடைசி பந்தில் தவான் 13 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் 8வது ஓவரில் ரோஹித் சர்மா, 11வது ஓவரில் ராயுடு, அதே ஓவரில் தினேஷ் கார்த்திக், 12 வது ஓவரில் ஷுப்மான் கில், 14வது ஓவரில் கேதார் ஜாதவ் என அடுத்தடுத்து ஆறு விக்கெட்டுக்கள் விழுந்தன. இவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அதன் பின்னர் வந்த பின்வரிசை ஆட்டக்காரர்களில் ஹர்திக் பாண்ட்யா(16), குல்தீப்(15), சஹால்(18) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க எண்களைத் தொட்டனர். இதனால் இந்திய அணி 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. வரிசையாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி இன்று 100 ரன்களுக்குள் சுருண்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.