லார்ட்ஸ் டெஸ்ட்: எதிர்பார்த்த தோல்வியே!

செவ்வாய், 26 ஜூலை 2011 (15:36 IST)
FILE
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று ஊடகங்கள் பல்வேறு விதமாக இதனை ஊதிப்பெருக்கக் கடைசியில் இந்திய அணி இங்கிலாந்திடம் சரணடைந்ததுதான் நடைபெற்றது. ஒரு கிரிக்கெட் பார்வையாளராக யோசிக்கும் போது இந்தத் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே!

முக்கியமான டெஸ்ட் தொடருக்கு முன்பான திட்டமிடுதல், கடுமையான முன் தயாரிப்புகள், தொடர் பற்றிய சிந்தனை எதுவும் இந்திய அணி வீரர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. இதைத்தான் நாசர் ஹுசைனும் கூறியுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து அணி கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக ஸ்ட்ராஸ் தலைமையில் டெஸ்ட் தொடர்களை தங்களது அபாரமான பந்து வீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் ஆகியவற்றால் வெற்றி பெற்று தன்னம்பிக்கையான மனோ நிலையில் களமிறங்கியது. மேலும் நல்ல முன் தயாரிப்பும் செய்திருந்தது.

மாறாக இந்திய அணியில் முக்கிய பந்து வீச்சாளரான ஜாகீர் கான் ஐ.பி.எல். இற்குப் பிறகு காயமடைந்து ஜனவரிக்குப் பிறகு சீரியஸ் கிரிக்கெட் எதிலும் விளையாடவில்லை.

நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் மேற்கிந்திய தொடரிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் முதல் நாளில் நன்றாக வெளுத்து வாங்கும் சேவாகை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இழந்தது இந்திய அணி.

ஏகப்பட்ட காரணங்களை நாம் இந்திய தோல்விக்கு அடுக்கினாலும், இத்துடன் இந்தத் தொடர் முடிந்து விடவில்லை, இந்தியா மீண்டும் வந்து இங்கிலாந்தை வெல்லும் என்றெல்லாம் பேசி நம்மை நாம் சமாதானம் செய்து கொண்டாலும், இந்தத் தொடரில் அது போன்ற மீள் எழுச்சி இருக்குமா என்பது ஐயமாகவே உள்ளது.

தோனி ஃபீல்டிங் களம் அமைப்பதில் சற்றே டெஸ்ட் போட்டிகளின் தன்மைக்கு ஏற்ப மாற்றி கொள்ளவேண்டும். ஸ்ரீனாத் பந்து வீசும்போது ஷாட் லெக் இல்லாமல் வீச மாட்டார். இஷாந்த் ஷர்மா ஸ்ரீனாத் போன்ற ஒரு இன்ஸ்விங் பந்து வீச்சாளர்தான், அவருக்கு ஷாட் லெக் இல்லாமல் வீசியதால் முதல் இன்னிங்சில் பீட்டர்சன் 20 ரன்கள் எடுக்கும் முன்னரே ஆட்டமிழக்கும் வாய்ப்பை இந்தியா இழந்தது. ஷாட்லெக்கில் எளிதான கேட்ச் ஒன்று சென்றது ஆனால் அங்கு ஃபீல்டர் இல்லை. அதன் பிறகு பீட்டர்சன் 200.

இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் ஷர்மா தனது லெந்தைக் கண்டுபிடித்துக் கொண்டார். ஆனால் அவரால் உணவு இடைவேளைக்குப் பின் பந்து வீச முடியவில்லை. காரணம் களைப்பு இதுவும் நியாயமானதே.

ஆனால் இது போன்ற தருணங்களில் 400 விக்கெட்டுகளைக் குவித்த ஹர்பஜன் சிங் தனது முழுத்திறனுடன் பந்து வீசியிருக்கவேண்டும், பந்துகள் திரும்புவேனா என்று அடம் பிடித்தது. நாம் எவ்வளவு ஓரமாக நின்று டிவியில் பார்த்தாலும் ஹர்பஜன் பந்துகள் மருந்துக்குக் கூட திரும்பியதாகத் தெரியவில்லை. ஹர்பஜன் சிங்கின் டெஸ்ட் இடத்தை நாம் உத்திரவாதமாக அவருக்கு அளித்து விட்டோம் என்றே தோன்றுகிறது. பிட்ச் இப்படியிருக்கிறது என்றால் ஏன் அவரைத் தேர்வு செய்ய வேண்டும்? அதுதான்! நாம் பிட்ச், சூழ்நிலை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாமல் பெயரின் பின்னால் செல்கிறோம், அமித் மிஷ்ரா அல்லது ஸ்ரீசாந்த் இருந்திருந்தால் ஹர்பஜனை விட சிறப்பாக வீசியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்தான் தோல்விக்குக் காரணம். முதல் இன்னிங்ஸில் எப்போதும் லஷ்மண் சோடை போகிறார். சச்சின் டெண்டுல்கரும் சோடை போகிறார். சரி இரண்டாவது இன்னிங்ஸிலாவது போட்டியை தோல்வியிலிருந்து காப்பற்றானாரா அதுவும் முடியாமல் போனது.

FILE
காரணம் சச்சின் டெண்டுல்கர் பம்மி பம்மி ஆடுவதே. அவர் தன்னம்பிக்கையுடன் அடித்து ஆடியிருந்தால் ஆட்டமிழந்திருக்க மாட்டார். பிராட் பந்தை நேராக காலில் வாங்கி தப்பித்தார். அது அவுட். ஆனாலும் நடுவரால் பிழைத்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் நின்றிருக்கலாம், ஆனால் அவர் உணவு இடைவேளைக்குப் பிறகு 40 பந்துகளில் 1 ரன் எடுத்தார். இது எதிரணியினரின் கைகளில் போய் விழும் பேட்டிங் உத்தியாகும். ரெய்னா இவரை விட மிகவும் எளிதாக விளையாடினார்.

வர்ணனை அறையில் இருந்த சௌரவ் கங்கூலியே சச்சின் ஆட்டத்தை விமர்சனம் செய்தார். அவர் இன்னும் சுதந்திரமாக ஆடியிருக்கவேண்டும், இப்படி பம்முவது அவரது ஆட்டம் அல்ல அதனால்தான் அவர் பம்முவது, அதுவும் சமீபகாலமாக இது போன்ற தருணங்களில் பம்முவது தனக்குப் புரியாத புதிராக உள்ளது என்றார். ஆனால் இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை சச்சின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர், கடவுள்! அப்படியென்றால் நம்மைக் கடவுள் கைவிட்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

5ஆம் நாள் ஆட்டம் துவங்கும் முன் பிட்ச் எப்படி இருக்கிறது என்று கூறுகையில் ரவி சாஸ்திரி கூறியதை சச்சின் கேட்டிருக்க வாய்ப்பில்லை. 'இது 5ஆம் நாள் பிட்ச் இல்லை. முழுக்கவும் ரன்கள் வாய்ப்பு உள்ள பிட்ச், வர்ணனை அறையில் இருக்கும் முதியவரான ஜெஃப்ரி பாய்காட்டை விட்டால் இப்போது கூட இந்தப் பிட்சில் சதம் எடுக்க முடியும்' என்றார்.

ஆனால் 98 ஓவர்களைத் தாக்கு பிடிக்க முடியாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 50,000 ரன்களை எடுத்த திராவிட், லஷ்மண், சச்சின் டெண்டுல்கர் மூவர் கூட்டணி தட்டுத் தடுமாறி ஆட்டமிழந்து பெவிலியன் சென்றது பரிதாபத்துக்குரியதாக இருந்தது.

முகுந்தை விட்டு விடுவோம், கம்பீர், சச்சின், திராவிட், லஷ்மண், ரெய்னா, தோனி இவர்களில் 15 ஓவர்கள் தாக்குப் பிடித்தது ரெய்னா மட்டுமே. மீதமுள்ள 5 வீரர்களும் நன்றாகத் திட்டமிட்டுத் தலைக்கு 15 ஓவர்களை எப்பாடுபட்டாவது நின்றே தீரவேண்டும் என்று மன உறுதி இருந்திருந்தால் கடைசி நாளில் 9 விக்கெட்டுகளை இழந்து உலகின் தலைசிறந்த பேட்டிங் வரிசைகொண்ட அணி பரிதாபத் தோல்வியைச் சந்தித்திருக்காது.

தலைக்கு 15 ஓவர்கள் தாக்குப் பிடிக்க எந்த மாதிரியான ஆட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பது களத்தில் திட்டமிடப்படவேண்டிய விஷயம். ஆனால் ஒவ்வொரு தனி வீரரும் தங்களது சொந்த பேட்டிங்கில் கவனம் செலுத்துவதையே பிரதானமாகக் கொண்டனர். தாங்கள் ஆட்டமிழந்து விடுவோம் என்ற பயத்திலேயே விளையாடினர். இதற்கு ஆதாரம் சச்சின், திராவிட், லஷ்மண், தோனி, கம்பீர் ஆகியோர் அவுட் ஆன விதம்.

எப்போதுமே இந்தியா முதல் டெஸ்டில் தோல்வி தழுவிகிறது பிறகு தொடரை சமன் செய்கிறது என்று சிலர் முந்தைய புள்ளி விவரங்களைக் காண்பிக்கலாம். ஆனால் இந்த முறை இது நடக்காது என்றே தோன்றுகிறது. இந்த இங்கிலாந்து அணி அது போன்ற அணியல்ல.

இந்த இங்கிலாந்தை வீழ்த்த உடற்தகுதியுடைய ஆக்ரோஷமான ஒரு அணியாக இந்திய அணி மாறவேண்டும். அதற்கு துவக்கத்தில் சேவாக் தேவை.

தோனி சீரியசாக யோசிக்கவேண்டும், அதனை விடுத்து ஆட்டக்களம் பந்துகளை உயரவும் தாழ்வுமாக வரச்செய்தது, பேட்ஸ்மென்கள் தங்கள் வழக்கமான டவுனில் இறங்க முடியவில்லை என்று தொடர்ச்சியாக நொண்டிச் சாக்குகளைக் கூறும் அணுகுமுறையிலிருந்து தோனி விடுபடுவது நல்லது.

நாம் பெயர்களை வைத்து இந்திய அணியை எடைபோட்டு வருகிறோம், இந்தத் தொடரைப் பொறுத்தவரை இந்தியா ஒருவித தயாரிப்பும் இல்லாமல் 'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்' என்ற வெகுஜன பகவத் கீதை வாசகத்தை நம்பி களமிறங்கியது போல்தான் தோன்றுகிறது. ஆனாலஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

இது வரை தோனி டெஸ்ட் தொடர் எதையும் இழக்கவில்லை, இந்தத் தொடரிலிருந்து அது துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்போதைக்கு இந்திய அணி விளையாடுவதையும், காயம் பட்டுள்ள வீர ர்களையும் பார்க்கும்போது இந்தத் தொடரை 0- 3, அல்லது 1- 3 என்று இந்தியா இழக்கும் என்றே தோன்றுகிறது.

இருப்பினும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்? இந்திய அணி எழுச்சி பெறுமா என்பதை! ஆனால் இதுவும் வெறும் நம்பிக்கை மட்டுமே.

வெப்துனியாவைப் படிக்கவும்