மீண்டும் தோனியின் மோசமான களவியூகம்; ஆஸ்ட்ரேலியா 482/4
புதன், 4 ஜனவரி 2012 (13:27 IST)
FILE
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, தற்போது ஆஸ்ட்ரேலியா என்று தோனியின் தலைமைவகிப்பு உத்தி சரிவைச் சந்தித்துள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் ரிக்கி பாண்டிங்கும், மைக்கேல் கிளார்க்கும்.
மைக்கேல் கிளார்க் அபாரமாக விளையாடி 251 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்கிறார். இவரது 18வது டெஸ்ட் சதமாகும் இது. இவரது டெஸ்ட் உயர்ந்தபட்ச ரன் எண்ணிக்கையும் இதுதான். இதற்கு முன்னர் 168 ரன்கள்தான் கிளார்க்கின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இருவரும் இணைந்து இன்று 4வது விக்கெட்டுக்காக 288 ரன்களைச் சேர்த்தனர். பாண்டிங் 134 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் தனது 40வது சதத்தை எடுத்தார். ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் தோனியை கடுமையாக சாடும். பாண்டிங்கை சதம் எடுக்க விட்டு மீண்டும் அவரைத் அணியில் தேர்வு செய்யவைத்து விட்டதே இந்த இந்திய அணி என்று தேர்வுக்குழு முதல் ஊடகங்கள் அவரை அனைவருக்கும் பாண்டிங்கின் சதம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பும் உள்ளது.
காலை வந்தவுடன் டீப் ஸ்கொயர் லெக் வைத்து பந்து வீச முடிவு செய்தார் தோனி. இது எதிர்மறை அணுகுமுறை என்று மீண்டும் அக்ரமும், இயன் சாப்பலும் குற்றஞ்சாட்டினர். அவர்கள் கூறுவது உண்மைதான். ரன்னைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்ற உத்தியினால் இன்று ஆஸ்ட்ரேலியா 90 ஓவர்களில் 366 ரன்களை எடுத்து ஒரேயொரு விக்கெட்டை மட்டும் பறிகொடுத்துள்ளது. மைக்கேல் கிளார்க் இன்று மட்டுமே 204 ரன்களை குவித்தார்.
என்ன பரவலான ஃபீல்ட் செட்-அப் வைத்து தோனி சாதித்து விட்டார்? தென் ஆப்பிரிக்காவில் இரண்டரை மணி நேர ஆட்டத்தில் இது போன்றுதான் டிவிலியர்ஸ் புரட்டி எடுக்க 220 ரன்களுக்கும் மேல் தென் அப்பிரிக்கா குவித்தது. அதேபோல்தான் இன்றும்.
களமிறங்கும்போதே இந்திய வீரர்களின் உடல் மொழி ஏதோ "செத்தவன் கையில் வெத்தலைப் பாக்கு கொடுத்தது' போல் என்று கூறுவார்களே அவ்வாறு இருந்தது. உமேஷ் யாதவ் பந்து வீசவந்தபோது ஸ்லிப்கள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்தன. பிறகு கிளார்க், பாண்டிங் என்ன வேடிக்கையா பார்ப்பார்கள் பின்னி பிரிகட்டினார்கள்.
தேநீர் இடைவேளைக்கு சற்று முன் இஷாந்த் ஷர்மா பந்தில் பாண்டிங் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு விரைவு ரன் குவிப்பில் ஹஸ்ஸி இணைந்தார் அவர் அஷ்வினின் ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் 1 சிக்சரை விளாசினார். ஆட்ட முடிவில் 55 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்திய அணியில் பந்து வீச்சில் சதத்திற்குக் குறைவில்லை. ஜாகீர், உமேஷ், இஷாந்த் ஆகியோர் சதம் எடுத்தனர்.
தோனியின் தலைமைப்பொறுப்பில் ஆக்ரோஷமாக களவியூகம் அமைத்து வீசும் ஜாகீர் கானையே அடி வாங்க வைத்த பெருமையை அடைந்தார்.
ஸ்லிப் இல்லாமல் அவரை வீசச் செய்து, மைக்கேல் கிளார்க் ஜாகீரை விளாசத் தொடங்கினார். நல்ல வீச்சாளர்களை மோசமான கேப்டன்சி மூலம் எப்படி கழிசடையாக்குவது என்பதை தோனியிடம் கற்று கொள்ளவேண்டும்.
ஆஸ்ட்ரேலியா 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எப்படியும் 400 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியாவை களமிறக்கும். இப்போதைக்கு இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அபாயத்தில் உள்ளது என்றே கூறவேண்டும்.