கேரி கர்ஸ்டன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சாதித்து விலகிய பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இங்கிலாந்து அணிக்கு 8 ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணியாற்றிய டன்கன் பிளெட்சர் என்ற முன்னாள் ஜிம்பாப்வே வீரரை பயிற்சியாளராக அறிவித்தது.
சில நாட்களுக்கு பேசாமல் இருந்த ஊடகங்கள், குறிப்பாக இந்தியாவை தற்போது ஆட்டிப்படைத்து வரும் காட்சி ஊடகங்கள், பிளெட்சருக்கு எதிராக குரல் கொடுக்க முதலில் சுனில் கவாஸ்கரையும் பிறகு கபில்தேவையும் அழைத்துள்ளன.
இருவரும் ஊடகங்களின் 'சென்டிமென்டை'ப் புரிந்து கொண்டு “இந்திய பயிற்சியாளர் ஒருவரும் இவர்களுக்கு தெரியவில்லையா?”, மொஹீந்தர் அமர்நாத் சிறந்த தெரிவு... என்றெல்லாம் கூறியுள்ளனர். கபில் ஒரு படி மேலே போய் “யார் இந்த பிளெட்சர்?” என்றே கேட்டுள்ளார்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியாதா அல்லது தெரிந்தே தெரியாதது போல் இருந்தார்களா என்று தெரியவில்லை. ஒப்பந்த காலம் முடிந்து விலகிய கேரி கர்ஸ்டன்தான் டன்கன் பிளெட்சரை பரிந்துரை செய்துள்ளார். கர்ஸ்டனின் பரிந்துரையின் பேரிலேயே பிளெட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.
புதிதாக வந்துள்ள பயிற்சியாளர் தனது பணியைத் தொடங்குவதற்கு முன்னதாகவே இவ்வாறு அவமரியாதை செய்வது அநாகரிகம் என்பது ஒரு புறமிருக்க, நமக்கு வேறு சில கேள்விகளும் எழுகிறது?
கிரெக் சேப்பலை 2005ஆம் ஆண்டு பயிற்சியாளராக நியமித்தபோது, அவரைத் தேர்வு செய்த நேர்காணல் குழுவில் சுனில் கவாஸ்கர் இருந்தார். எல்லோரும் சேர்ந்துதான் கிரெக் சாப்பலைத் தேர்வு செய்தனர். அதன் பிறகு என்னவாயிற்று என்பதை நாம் அறிவோம். அப்போது கவாஸ்கர் செய்த தேர்வு மீது ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை. மாறாக கிரெக் சேப்பலை கடுமையாகத் தாக்கத் தொடங்கின. இது ஒரு விதத்தில் சரிதான் என்றாலும் அவரை நியமித்தவர் மீது ஏன் விமர்சனம் செய்யவில்லை? அப்போது இந்திய பயிற்சியாளர்கள் இவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? அன்றைக்கும் மொஹிந்தர் அமர்நாத் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்திருந்தாரே?
PTI Photo
FILE
அயல்நாட்டுப் பயிற்சியாளர் ஜான் ரைட், சௌரவ் கங்கூலியின் ஆக்ரோஷமான அணித் தலைமையின் கீழ் இந்திய அணியை இன்றைக்கு உள்ள புகழுக்கு அடித்தளம் கொடுக்கவில்லையா? அந்த அடிப்படையில்தானே கிரெக் சாப்பலைத் தேர்வு செய்தார்கள்? அது வினையில் போய் முடியவில்லையா? அயல்நாட்டு பயிற்சியாளர்கள் மீது அப்போது எதிர்மறை எண்ணம் தோன்றியிருந்தால், அதன் பிறகு மற்றொரு அயல்நாட்டு பயிற்சியாளரான கேரி கர்ஸ்டனை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
இடைநிலைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியையே தொடரச்செய்திருக்கலாமே அல்லது சந்தீப் பாட்டீலை பயிற்சியாளராக நியமித்திருக்கலாமே, இன்னும் சொல்லப்போனால் விண்ணப்பம் செய்திருந்த மொஹீந்தர் அமர்நாத்தை பணியில் அமர்த்தியிருக்கவேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யவில்லை எனில், அமர்நாத் ஒரு விவகாரம் பிடித்தவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது வீரராக விளையாடிய காலத்தில் நியாயமான காரணங்களுக்காக கடும் விமர்சனங்களை வைத்தவர், அணித் தேர்வாளர்களை "ஜோக்கர்கள்" என்று அழைத்தவர் என்ற காரணத்தினால் எங்கு அவர் ஒத்துவராமல் போய் விடுவாரோ என்ற அச்சம் இருந்திருக்கிறது என்று நாம் ஏன் கூறக்கூடாது?
நமது கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் தற்போது ஒரு மனோ வியாதி பிடித்துள்ளது. அது என்னவெனில், ஒரு விஷயத்தைப் பற்றி இவர்கள் ஒரு யூகத்தைச் செய்தியாக வெளியிடுகின்றனர். அந்த யூகம் நிறைவேறிவிட்டால் நாங்கள் கூறியது உண்மை என்று பெருமை பிடித்து ஆடுவது. அது நடக்கவில்லையா... உடனே அதனை எதிர்க்க ஆட்களை திரட்டுவது, ஊடகங்களின் இந்த விளையாட்டு தெரியாமல் முன்னாள் வீரர்கள் பலர் இந்த வலையில் விழுகின்றனர்.
ஒரு கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி என்று ஊடகங்கள் தீர்ப்பளிக்கின்றன. அதற்கான பொதுக்கருத்தையும் உருவாக்கி மக்களையும் அதுதான் உண்மை என்று நம்பவைக்கின்றன. ஆனால் சட்டமும், நீதியும் ஊடகங்களை பார்த்தா தீர்ப்பளிக்க முடியும், நீதித்துறையின் தீர்ப்பு என்பது சட்ட நடைமுறைகளுக்குட்பட்டது, அதன்படிதான் தீர்ப்பளிக்க முடியும். தீர்ப்பு மாறிவந்தால் உடனே அந்த நீதிபதி, அது தொடர்பான முக்கியஸ்தர்களுக்கு எதிராக கடும் பிராச்சரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன. இதே வர்த்தக நடைமுறையை ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர் நியமன விவகாரத்தில் காண்பிப்பது நியாயமாகுமா என்பதே நமது கேள்வி.
PTI Photo
FILE
இந்த முறை கேரி கர்ஸ்டன் விலகியதும் இங்கிலாந்தின் பேட்டிங் ஆலோசகராக இருந்து வரும் ஜிம்பாவே முன்னாள் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் ஆன்டி பிளவர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று ஊடகங்கள் யூகம் செய்தன. அது நடக்கவில்லை. உடனே பிளெட்சர் யார் என்று கேட்க ஆட்களைத் திரட்டுகின்றன.
கடந்த காலத்தில் பிளெச்டர்:
1999ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிளெட்சர் பொறுப்பேற்றபோது இங்கிலாந்து அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் என்று அனைத்திலும் தோல்வி மயம்.
அப்போதுதான் நாசர் ஹுசைன், மைக்கேல் வான் ஆகியோரது தலைமையில் புதிய தன்னம்பிக்கையை இங்கிலாந்து அணி பிளெட்சரின் பயிற்சியில் பெறுகிறது. இவரது பயிற்சிக் காலத்தில்தான் இங்கிலாந்து அணி பாகிஸ்தான், இலங்கையில் டெஸ்ட் தொடர்களை வென்றது. துணைக்கண்டத்தில் இங்கிலாந்து நிகழ்த்திய அதிகபட்ச இந்த சாதனை பிளெட்சர் காலத்தில்தான் நடந்தது. அதன் பிறகு இங்கிலாந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வெல்வதில் பிளெச்டரின் பங்கு பற்றி நாசர் ஹுசைனும், கேப்டன் மைக்கேல் வானும் மிகச் சிறப்பாகவே புகழ்ந்து பேசியுள்ளனர்.
இதனாலெல்லாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு இவர் சிறந்த பயிற்சியாளராக மிளிர்வார் என்று முன் கூட்டியே நாம் அறுதியிடவில்லை. கேரி கர்ஸ்டனும் முன் அனுபவம் இல்லாமல்தான் வந்தார். முன்னதாக ஜான் ரைட்டும் அனுபவம் இல்லாமல்தான் வந்தார். ஏன் கிரெக் சாப்பலுக்கே ஒரு சர்வதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனுபவம் அதுவரை இருந்ததில்லை என்பதே நாம் கவனிக்கத்தக்கது.
கேரி கர்ஸ்டன் போன்றே, டன்கன் பிளெட்சரும், "நான் உங்களுக்கு எப்படி உதவட்டும்? என்ற அணுகுமுறையை உடையவர் என்று கூறப்படுகிறது.. மாறாக கிரெக் சாப்பலின் 'நீ இப்படித்தான் செய்தாகவேண்டும்' என்ற அணுகுமுறையே இந்திய அணியை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.
எனவே நாம் பொறுத்திருந்து பார்ப்போம், அதற்குள் டன்கன் பிளெட்சர் மீது அவதூறு கிளப்புவது அநாகரிகமான செயல், கண்டிக்கத்தக்கது!