பணத்திற்கு முன்னால் கிரிக்கெட்டை கவனியுங்கள்-பிசிசிஐ மீது டோனி கிரேக் தாக்கு!

புதன், 27 ஜூன் 2012 (18:32 IST)
FILE
பில்லியன் டாலர்கள் கணக்கில் பணம் சம்பாதிப்பதைவிட கிரிக்கெட் ஆட்ட உணர்வையும் கிரிக்கெட் ஆட்டத்தையும் நிலை நிறுத்த பி.சி.சி.ஐ. முன் வரவேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான டோனி கிரேக் பிசிசிஐ மீது சாடல் தொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது பணம் மற்றும் செல்வாக்கினாலும் பொருளாதார பலத் திமிரில் ஐ.சி.சி.யை தங்கள் பணம் பண்ணும் நலத்திற்குப் பயன்படுத்தி வருகிறது மாறாக கிரிக்கெட் அழிந்து வருகிறது என்று கடுமையாக சாடியுள்ளார் டோனி கிரேக்!

குறிப்பாக நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு தொழில் நுட்பத்திற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது இந்தியாவின் கிரிக்கெட் உணர்வை பறை சாற்றுவதாக உள்ளது என்று டோனி கிரேக் கடுமையாக சாடியுள்ளார்.

"கிரிக்கெட் ஆட்டத்தின் பெரும்பகுதி இந்தியாவினால் கட்டுப்பாடு செய்யப்படுகிறது. பி.சி.சி.ஐ.யிற்கு எந்த ஒரு முன்மொழிவையும் தடுக்க போதுமான வோட்டுகள் ஐ.சி.சி. யில் உள்ளது இதனால் ஐ.சி.சி. ஒரு செயல்படாத கட்டுப்பாட்டு அமைப்பாக இன்று சீரழிந்துள்ளது" என்று கூறியுள்ளார் டோனி கிரேக்.

இதற்குக் காரணம் என்னவெனில் சில நாடுகள் இந்தியாவின் பணம் இல்லாமல் கிரிக்கெட் உலகில் நிற்க முடியாத நிலை உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஆசிய லீகாக மாற்றவேண்டும் என்றும் ஸ்டீவ் வாஹ் கூறுவது போல் பொய் கூறுவதை கண்டுபிடிக்கும் எந்திரத்தை வீரர்களிடத்தில் பயனடுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நிரம்பியதாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார் டோனி கிரேக்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். மூலமாக சில பணக்கார கிரிக்கெட் வீரர்களை உருவாக்குகிறதே தவிர டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்து வருகிறது என்கிறார் டோனி கிரேக்.

ஆனால்...

இன்று இவ்வாறு கூறிவரும் டோனி கிரேக் அன்று என்ன செய்தார்?

இங்கிலாந்து அணியிலிருந்து விலகியபோது, கிரிக்கெட் வாரியங்களின் செயல்பாடுகள் மீது வீரர்கள் அதிருப்தி கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில், கெர்ரி பேக்கர் என்ற தனி முதலாளிக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கிரிக்கெட் தொடரை நடத்த உதவி புரிந்தவர்தானே இந்த டோனி கிரேக். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கவா டோனி கிரேக் செயல்பட்டார். எவ்வளவு நாட்டு வீரர்கள் கெர்ரி பேக்கரின் பணத்திற்கு இரையாகி டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்தனர். லிஸ்ட் நீளமாகும் விவகாரமாகும் இது.

1977 ஆம் ஆண்டு கெர்ரி பேக்கர் என்ற தனி முதலாளிக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலை செய்த டோனி கிரேக் அப்போது கெர்ரி பேக்கரைச் சந்தித்து பேசியதன் உரையாடலின் ஒரு பகுதி வெளியானது அதில் அவரே திருவாய்மொழி அருளியுள்ளதைப் பார்ப்போம்:

"கெர்ரி, எனக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனையில்லை. எனக்கு 31 வயதாகிறது. நான் இரண்டு அல்லது 3 டெஸ்ட்கள் சரியாக விளையாடவில்லை என்றால் இங்கிலாந்து அணியிலிருந்து விலக்கப்படுவேன். என்னை அணியிலிருந்து நீக்கிய பிறகு சாதாரண வேலைகளில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லை. மற்ற எல்லா அக்கறைகளையும் விட எனது குடும்பத்தின் எதிர்காலம்தான் எனக்கு இப்போது முக்கியமாக படுகிறது. எனக்கு ஆயுள் முழுதுக்குமான பணியைக் கொடுத்தால் நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

ஏண்டாப்பா உனக்கு ஒரு நியாயம் இப்ப விளையாடற பிளேயருக்கு ஒரு நியாயமா?

பிசிசிஐ யோக்கிய்மான அமைப்பு என்று நாம் கூறவரவில்லை, மாறாக அதனை விமர்சிப்பவர் தான் அந்தக் காலதில் இதே வேலையைச் செய்தோமே என்ற நினைவு கூட இல்லாமல் இன்று அய்யகோ டெஸ்ட் கிரிக்கெட் அழிகிறதே என்று புலம்பும் நேர்மையின்மைதான் நமது பிரச்சனை.

மற்றபடி பி.சி.சி.ஐ.-யின் போக்குகள் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவையே என்பதில் இருவேறு கருத்து இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்