நிச்சயமற்ற இந்தியப் பந்து வீச்சிற்கும் நிச்சயமற்ற ஆஸ்ட்ரேலிய பேட்டிங்கிற்குமான டெஸ்ட் தொடர்!
புதன், 21 டிசம்பர் 2011 (11:48 IST)
FILE
கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படும் கொண்டாட்டமான நாளில் மெல்பர்ன் மைதானத்தின் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் முன் இந்திய அணி ஆஸ்ட்ரேலிய அணியை எதிர்கொள்கிறது.
மெல்பர்ன், பெர்த், அட்லெய்ட், சிட்னி ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரை நிச்சயமற்ற இந்திய பந்து வீச்சிற்கும், நிச்சயமற்ற ஆஸ்ட்ரேலிய பேட்டிங்கிற்கும் உள்ள டெஸ்ட் தொடராகக் கணிக்கலாம்.
2 பயிற்சி ஆட்டங்களில் இந்திய பேட்டிங் பலம் ஓரளவுக்குத் தெரிந்தது. ஆனால் பந்து வீச்சில் அஷ்வின், உமேஷ் யாதவ் தவிர மற்றவர்கள் நம்பிக்கையளிக்கவில்லை.
காயமடைந்துள்ள இஷாந்த் ஷர்மாவையும், நிச்சயமற்ற ஜாகீர் கானையும் தேர்வு செய்தது தவறாக முடிந்து போய்விடக்கூடாது என்று தோனி தான் கடாவெட்டிக் கும்பிடும் சாமியை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
உமேஷ் யாதவிடம் வேகத்துடன் ஸ்விங்கும் உள்ளது. அஷ்வின் படபடவென விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர். இந்த நிலையில் இஷாந்த் உடற்தகுதி பெறாமல் போனால் கூட ஒன்றுமில்லை. ஜாகீர், உமேஷ், யாதவ், பிராக்யன் ஓஜா அல்லது மிதுன் போதுமானது.
ஆஸ்ட்ரேலியாவின் பேட்டிங் இப்போதெல்லாம் நல்ல நிலையிலிருந்து படபடவென்று வீழ்ச்சியுறும் தன்மையை அடைந்துள்ளது.
மேலும் இத்தனையாண்டுகால கிரிக்கெட்டில் இந்தியா பலமுறை ஆஸ்ட்ரேலியா சென்றுள்ள போதும் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கறைபடு வரலாறே. 1986ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் சென்ற போது நடுவர்களின் அசாத்திய மோசடியால் கபில் தொடரை 2- 0 என்று கைப்பற்றவேண்டியது. முடியாமல் போனது.
2008ஆம் ஆண்டும் மெல்பர்னில் தோற்றாலும் சிட்னியில் இந்தியா வெற்றி பெற வேன்டிய போட்டிதான். நடுவர் மோசடிகளை நாம் பார்த்தோம். அதன் பிறகு பெர்த்தில் வெற்றி பெற்றது இந்தியா, அடிலெய்டில் ஆஸ்ட்ரேலியா பயந்து போய் மந்தமாக விளையாடி டிரா செய்தது.
இப்போது இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது என்று பலரும் கருதினாலும், நிச்சயமற்ற பந்து வீச்சை ஆஸ்ட்ரேலியா பயன்படுத்திக் கொள்ளுமேயானால், அவர்கள் 400 அல்லது 450 ரன்களையோ அதற்கு மேலோ குவித்தால் இந்திய பேட்ஸ்மென்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.
FILE
ஜேம்ஸ் பேட்டின்சன் என்ற அருமையான வேகப்பந்து வீச்சாளர் அணிக்கு வந்துள்ளார். 150 கிமீ வேகமும் அதற்கேற்ப ச்விங்கும் உள்ளவர். இவருக்கு சேவாக் அபாயகரமானவர் அதேவேளையில் சேவாகிற்கும் இவர் அபாயமானவர். இதில் யார் வெல்வார்கள் என்பதைப் பொறுத்து இந்த தொடரின் விதி அமையும்.
அதே போல் ஜாகீர் கான் அபாரமாக வீசுவதைத் தடுக்க ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்கள் முயற்சி மேற்கொள்வார்கள். அதற்கு பலமான துவக்க வீரர்கள் வேண்டும். இப்போது ஆஸ்ட்ரேலிய அணியில் அது இல்லை. எனவே ஜாகீருக்கு ஆரம்பத்தில் ஆஸ்ட்ரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க நல்ல வாய்ப்புள்ளது.
FILE
அனைவரும் எதிர்பார்ப்பது போல் சச்சின் டெண்டுல்கர் 100வது சதத்தை இங்கு எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் அவ்வளவு நீளமான தொடர் இது. தன் டெஸ்ட் வாழ்க்கையை இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவில் துவங்கிய சச்சின் டெண்டுல்கர் தன்னைப் போல் ஆடுகிறார் என்று ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் கடவுள் டான் பிராட்மேன் கூறியுள்ளதாலும் அவர் அங்கு தனது 100வது சதத்தை எடுக்கவேண்டும் என்பதே முறை.
ஆஸ்ட்ரேலியாவின் பழைய வீரர்களான ஹஸ்ஸி, பாண்டிங் ஆகியோரைக் கண்டு அஞ்சாமல் இந்தியா ஆஸ்ட்ரேலியாவின் இளம் வீரர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விளையாடவேண்டும். உதாரணத்திற்கு துவக்க வீரர்களான டேவிட் வார்னர், கோவன், ஷான் மார்ஷ் ஆகியோரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். பந்து வீச்சில் நேதன் லயன், ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில் ஆகியோரை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆஸ்ட்ரேலியாவைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் அவர்களுக்கு அபாய வீரர்கள் என்றால் ராகுல் டிராவிட், ஆவார். அவர் சரியான 'டச்'-இல் உள்ளார். பிறகு லஷ்மண் - இவர் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக பல சாதனைகளைக் கையில் வைத்துள்ளார். பிறகு சச்சின் பற்றி கூறவேண்டியத் தேவையில்லை.
தோனி கொஞ்சம் பேட்டிங்கில் கவனக் குவிப்பு செய்யவேண்டும். ஃபீல்டிங் செட்-அப்பிலும் ஆஸ்ட்ரேலிய மைதானங்களுக்குத் தக்கவாறு செய்யவேண்டும். இங்கிலாந்தில் தேர்ட் மேன் திசையில் 500 ரன்களைக் கொடுத்தது போல் இங்கு செய்யக்கூடாது.
பிட்ச் பற்றி குறிப்பிடவேண்டுமென்றால் அடிலெய்ட் தவிர மற்ற ஆட்டக்களங்கள் நிச்சயம் முதல் இரண்டு நாட்களுக்காவது வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும்.
பந்து வீச்சை நம்பி ஆஸ்ட்ரேலியா இருப்பதாலும், இந்தியப் பந்து வீச்சு வரிசை நிச்சயமற்ற நிலையில் இருப்பதாலும், இந்தியாவில் அபாய ஸ்பின்னர் அஷ்வின் இருப்பதாலும் இந்த முறை பசுந்தரை ஆட்டக்களங்களையே இந்தியா எதிர்கொள்ள நேரிடும் எனவே பேட்ஸ்மென்கள் தங்களது அனுபவத்தைக் காண்பிக்கவேண்டும்.
பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக வீசுவது அவசியம். தோனியின் கள அமைப்பில் சாதுரியம் இருந்தாலும் ஆக்ரோஷம் இல்லை. வேகப்பந்து வீச்சிற்கு இவரது கள வியூகம் இதுவரை திருப்திகரமாக இருந்ததில்லை.
இந்த முறை எப்படி செய்கிறார் என்றுபார்ப்போம். இந்திய அணி நன்றாக விளையாடி தொடரைக் கைப்பற்றவேண்டுமென்றால். துவ்க்கம் பலமாக இருக்கவேண்டும். அது பந்து வீச்சாக இருந்தாலும் சரி பேட்டிங்காக இருந்தாலும் சரி!