நம்பர் 1 அணி சிறந்த டெஸ்ட் அணியாக இருக்கவேண்டிய தேவையில்லையா?
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2011 (14:48 IST)
FILE
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், இங்கிலாந்து இந்திய அணியை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி படுதோல்வியைக் கொடுத்துள்ளது. நாம் இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கவனிப்பது நல்லது. இந்திய அணி நம்பர் 1 அணிதான். ஆனால் சிறந்த டெஸ்ட் அணி அல்ல என்பது ஒன்றுக்கு இரண்டு முறை நிரூபனமாகியுள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் சிறந்த அணியாக இருந்தால் இயன் பெல் 159 ரன்களை தனி நபராக எடுத்த பிட்சில், பந்து வீச்சாளரான டிம் பிரெஸ்னன் 90 ரன்களை எடுத்த ஒரு பிட்சில், இந்தியா பெல் எடுத்த ரன்னைக் காட்டிலும் ஒரு ரன் குறைவாக அனைத்து விக்கெட்டுகளையும் அதே நாளில் இழந்துள்ளது! எந்த ஒரு சிறந்த டெஸ்ட் அணியும் இது போன்ற இழிவைச் சந்தித்ததில்லை.
மேலும் ஸ்லிப் திசையில் பார்த்தால் திராவிட், லஷ்மண் என்று வயசான பார்ட்டிகள். 3 கேட்சில் ஒரு கேட்சை மட்டுமே பிடிக்க முடிகிறது. தோனியின் விக்கெட் கீப்பிங்கும் கடும் சரிவு கண்டுள்ளது. இதனை மிகச் சரியாக இயன் சாப்பலும், ஷேன் வார்னும் கவனித்துள்ளனர்.
ஃபீல்டிங் என்பது எந்த ஒரு சிறந்த அணியின் முக்கியமான ஒரு திறனாகும். ஆஸ்ட்ரேலியா, மேற்கிந்திய தீவுகள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டங்களில் பந்து வீச்சிற்குத் தக்க ஸ்லிப் ஃபீல்டிங், வெளி மைதான ஃபீல்டிங் இருக்கும். இந்திய அணியிடம் இது இல்லை. எனவே நம்பர் 1 அணியாக இருப்பது வேறு சிறந்த டெஸ்ட் அணியாக இருப்பது வேறு.
எப்போதுமே இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ஆதிக்கமெல்லாம் செலுத்தியதில்லை. கங்கூலி தலைமையில் அயல்நாட்டு மண்ணில் வெற்றி பெறத் தொடங்கினோம், இந்திய அணி சீராக வெற்றிகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறத் தொடங்கியது 2000ஆம் ஆண்டு முதல்தான் என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது.
கங்கூலி, ஜான் ரைட் கூட்டணி உருவாக்கிய அடித்தளத்தில்தான் தோனி, கர்ஸ்டன் கூட்டணி நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க முடிந்தது. அதனால் இந்திய அணி நம்பர் 1 இடத்தைப் பிடித்து நம்பர் 1 போல் ஆடவில்லை என்றெல்லாம் புலம்ப வேண்டியத் தேவையில்லை. நம்பர் ஒன் என்பது வேறு, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி என்பது வேறு.
அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி மற்றொன்றில் டிரா செய்தாலோ அல்லது 2-இலும் வென்றாலோ இந்திய அணி சிறந்த டெஸ்ட் அணியாக இருக்கிறது என்பது நிரூபணமாகும். ஆனால் அதற்கு அடிப்படையில் சில அணுகுமுறை மாற்றங்கள் தேவை.
முதலில் காயம், நெருக்கமான தொடர்கள், வீரர்களின் களைப்பு போன்ற நொண்டிச் சாக்குகளைத் தவிர்த்து உண்மையில் அணி வீரர்களிடத்திலும் திறமையிலும் உள்ள கோளாறுகளை மனம் திறந்து அலசி ஆராய வேண்டும்.
56 ரன்கள் எடுத்த பிறகு, உலகின் தலை சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்விங்கர் என்று தெரிந்தும் அதனை ஆடாமல் பேடைக் காட்டியது ஏன்? அது என்ன மனோ நிலை? பந்துகள் அபாயகரமாக ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கையில், பந்து உள்ளே வருகிறதா, வெளியே செல்கிறதா, இதில் மட்டையைக் கொண்டு போனால் எட்ஜ் ஆகிவிடுமோ என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனால் 56 ரன்கள் எடுத்த பிறகு பந்து உள்ளே வருவதைப் பார்த்த பிறகும் வெறும் பேடை மட்டும் காண்பிப்பது சரியான பேட்டிங் அல்ல. ஆனால் இது மனோநிலை சார்ந்தது. தோனியும் அவ்வாறே ஆட்டமிழந்தார். முதலில் பந்தை மட்டையில் சந்திக்கும் தைரியமும் துணிவும் வேண்டும். அது எட்ஜ் ஆகட்டும் அல்லது பீட் செய்து விட்டுப் போகட்டும், நேராக பேடை நீட்டுவது என்பது சிறுபிள்ளைத்தனமான கிரிக்கெட் உத்தி.
FILE
பேட்டை பந்தின் அருகில் கொண்டு வந்தால் கூட ஒரு 'இன்சைடு எட்ஜ்' இவர்களைக் காப்பாற்ற போதுமானது. ஆனால் ஆடாமல் விடுவது சச்சின் மற்றும் கேப்டன் தோனியின் பலவீனமான, தோல்வி மனப்பான்மையையே காண்பிக்கிறது. இந்த மனோநிலைதான் இந்திய அணியின் மனோ நிலையாக பிரதிபலிப்பு அடைந்துள்ளது.
ரெய்னா புல் ஆட முயன்று ஆட்டமிழந்ததை நாம் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் யுவ்ராஜ் சிங் ஷாட் பிட்ச் பந்தை ஆடிய விதம் பார்க்க மிகவும் மோசமாக இருந்தது. அணியின் இளம் வீரர்கள் அவர் ஆடுவதைப் பார்த்தால் பிட்சில் ஏதோ பூதம் இருக்கிறது என்ற எண்ணம்தான் ஏற்படும்.
செடேஷ்வர் புஜாரா காயமடைந்தார் என்றால் அவ்வளவுதான், அவரைப்பற்றிய செய்திகளைக்கூட காணோம். அவர் ஓரளவுக்குத் தைரியமாக ஆடுவார். ஆனால் அவர் என்ன செய்ய முடியும்? அவர் பின்னால் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஸ்பான்சர்கள் இல்லையே! யுவ்ராஜ் பின்னால் அந்தக் கார்ப்பரேட் கூட்டம் உள்ளது! ஒரு இன்னிங்ஸில் 62 அடித்தார். அதிலும் ஒரு லைஃப், ஏகப்பட்ட பந்துகளைத் தப்பும் தவறுமாக விளையாடி பந்துகள் மட்டையைக் கடந்து எண்ணற்ற முறை சென்றது.
மாறாக இங்கிலாந்து அணி தனது அணுகுமுறையில் ஈவு இரக்கமின்றி நடந்து கொண்டது. இந்திய அணியை நசுக்குவதன் மீதான் அவர்களின் ஆக்ரோஷம், அவர்கள் ஆடிய விதத்தில் தெரிந்தது. ஸ்டூவர்ட் பிராட் இந்தத் தொடருக்கு முன்னால் விக்கெட்டுகள் இல்லாமல் போராடினார். பலர் அவரை அணியில் தேர்வு செய்யக்கூடாது என்றே கூறினர்.
ஆனால் இன்று அவர் ஆல் ரவுண்டர், ஹேட்ரிக் சாதனையாளர், வெற்றி நட்சத்திரம், ஆட்ட நாயகன்! இந்த நிலைக்கு உயர்வதற்கான பயிற்சியிலும் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். அதனால்தான் கேப்டன் ஸ்ட்ராஸ் அவருக்கு ஒரு கடைசி வாய்ப்பு வழங்குவோம் என்று அவருக்காக வாதாடினார், வெற்றி பெற்றார்.
ஆனால் நம் தோனி என்ன செய்கிறார்? ஹர்பஜன் சிங்கிற்கு எந்த வித ஸ்பின்னும் இல்லை என்று தெரிந்தே இரண்டு டெஸ்ட் போட்டிகளாக அவரை அணியில் தேர்வு செய்துள்ளார்! பீட்டர்சன் உட்பட இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் பவுன்ஸ் ஆகி மார்புக்கு நேராக வரும் பந்துகளை ஆடும்போது பந்துகள் மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஷாட் லெக் திசையில் கேட்சாகச் செல்கிறது. ஆனால் ஷாட் லெக்கில் ஃபீல்டரை நிறுத்தவில்லை!
FILE
பீட்டர்சன் அந்த இடத்தில் அவுட் ஆகக்கூடியவர்தான். அன்று பெல் கூட ஒரு பந்தை அவ்வாறு ஆடினார். கேட்ச் சென்றது, ஆனால் அந்த இடத்தில் ஃபீல்டர் இல்லை. ஏனென்று கேட்டால் அந்த இடத்தில் ஃபீல்டரை நிறுத்தி கம்பீருக்குக் காயம் ஏற்பட்டு விட்டது. இன்னொரு ஃபீல்டரையும் இழக்கவேண்டாம் என்று கூறுவார் தோனி!
ஸ்ட்ராஸ் ஒரு வீரரை எப்படி உருவாக்குகிறார்? தோனி எப்படி பயனற்ற வீரர்களைப் பாதுகாக்கிறார் என்பது இதிலிருந்து வெளிப்படை. கம்பீர் காயமடைந்த அந்த மோசமான பந்தை வீசியதற்காகவே ஹர்பஜனை அணியிலிருந்து நீக்கியிருக்கவேண்டும்.
டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் தோனியின் கள வியூகம் பார்க்கவே அதிர்ச்சியூட்டும் விதமாக் இருந்தது. பெல் எடுத்த 159 ரன்களில் 70- 80 ரன்கள் தேர்ட் மேன் திசையில் பவுண்டரிகள் மூலம் வந்தது. அதாவது அனைத்து ஷாட்களும் மட்டையின் விளிம்பில் பட்டுச் சென்றது. அது மட்டுமல்ல இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் எடுத்த 544 ரனக்ளில் 250 ரன்கள் தேர்ட்மேன் திசையில் பவுண்டரிகளாக வந்ததே. தோனி என்ன செய்து கொண்டிருந்தார்? வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்!
மூத்த வீரர்களில் எவரும் தோனியிடம் தேர்ட்மேன் பவுண்டரிகளைத் தடு என்றோ, தோனியுமே கூட பந்து வீச்சாளர்களிடம் சென்று தேர்ட்மேன் திசையில் ஒரு பவுண்டரி கூட போகக்கூடாது என்றோ கூறவில்லை. நல்ல பந்துகளெல்லாம் இவ்வாறு பவுண்டரிகளாகச் சென்றதால் பந்து வீச்சாள்ர்கள் மனச் சோர்வு கண்டனர். மனச்சோர்வை உருவாக்கியவர் தோனி, கடைசியில் பந்து வீச்சாளர்கள் களைப்படைந்து விட்டனர் என்று கூறுகிறார்!
தேர்ட்மேன் திசை பவுண்டரிகளினாலேயே தோனி ஒருமுறை பாகிஸ்தானிடம் சாம்பியன்ஸ் டிராபியில் தோல்வி தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப ஃபீல்டிங் எவ்வாறு அமைப்பது என்பதை இங்கிலாந்திற்கு பயிற்சி அளித்த டன்கன் பிளெட்சர் பயிற்றுவிக்க வேண்டும்.
அடுத்த டெஸ்ட் போட்டிக்கு சேவாக் வந்து விடுகிறார். வந்திறங்கியவுடன் அவரால் மட்டும் என்ன செய்து விட முடியும் என்று தெரியவில்லை. மேலும் இந்த இங்கிலாந்து அணியின் மனோ நிலை மிகவும் பலம் வாய்ந்தது. அதனை அவ்வளவு எளிதாக உடைத்து விட முடியாது என்றே தோன்றுகிறது.
அனைத்துக் கோளாறுகளையும் மீறி தோனி இந்திய அணியின் முதலிடத்தைத் தக்க வைத்தார் என்றால் அது உலகக் கோப்பையை வென்றதை விட சிறந்த சாதனையாகவே இருக்கும்.
இப்போதைக்கு தோனியின், இந்திய அணியின் 'ஹனிமூன்' முடிந்து விட்டது என்றே தோன்றுகிறது.