ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், தனது பந்து வீச்சைக்கண்டு சச்சின் டெண்டுல்கர் பயந்தார் என்று தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளது பரபரப்பாகியுள்ளது.
2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினும், சேவாகும் வெளுத்ததை அக்த்ர் மறந்து விட்டார் போலும். குறிப்பாக அக்தரை சச்சின் அன்று வெளுத்துக் கட்டினார். அதன் பிறகு அந்த இன்னிங்ஸை நினைத்தாலே நடுங்குகிறது என்று கூறிய அக்தர், இப்போது சச்சின் தன்னைக் கண்டு பயந்து போயிருப்பதாகக் கூறுவது நகைப்புரியதாக உள்ளது.
"கான்ட்ரொவெர்சியலி யுவர்ஸ்'" என்ற தனது நூலில் அவர் சச்சின் பற்றிக் குறிப்பிடுகையில்,'நான் ஒரு வேகமான பந்தை அவருக்கு வீசினேன், எனக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் அவர் அந்தப் பந்தை தொடவில்லை. அவர் விலகிச் சென்றார். அப்போதுதான் முதன்முறையாக நான் சச்சின் விலகிச் சென்றதைப் பார்த்தேன். அதுவும் பைசலாபாத் போன்ற மந்தமான ஆட்டக்களத்தில்! என்று அக்தர் எழுதியுள்ளார்.
மேலும் சச்சின் தனது பந்து வீச்சைக் கண்டு அஞ்சினார் என்றும் பலமுறை தனது பந்து வீச்சை அவர் அச்சம் காரணமாக எதிர்கொள்வதைத் தவிர்த்தார் என்று கூறியுள்ள ஷோயப் அக்தர், சச்சினும், திராவிடும் மேட்ச் வின்னர்கள் இல்லை என்றார். இவர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை வெற்றிகரமாக முடிக்கத் தெரியாது என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
அதேபோல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதன் முதலாக கொல்கட்டா அணிக்கு தன்னை ஒப்பந்தம் செய்த ஷாரூக் கானும், லலித் மோடியும் தன்னை குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்து ஏமாற்றினர் என்று அதிரடித் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அதேபோல் வாசிம் அக்ரம்தான் தனது கிரிக்கெட் வாழ்வு பாழாய்ப் போனதற்குக் காரணம் என்றும் ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.
அதாவது ஷோயப் அக்தர் அணியில் சேர்க்கப்பட்டால் அணியிலிருந்து பாதி வீரரகளுடன் தான் ஒதுங்கி விடுவேன் என்று வாசிம் அக்ரம் தன்னை அணியில் சேர்ப்பதற்கு மறைமுக எதிர்ப்பு காட்டியதாக அந்த புத்தகத்தில் குற்றம்சாற்றியுள்ளார்.
அதேபோல் ஷோயப் மாலிக் கேப்டனாகும் தகுதி இல்லாதவர் அவர் ஏன் கேப்டன் ஆக்கப்பட்டார் என்றால் அவர் பி.சி.பி. தலைவர் நசீம் அஷ்ரஃபின் கைத்தடியாகச் செயல்பட்டார்.
அதே புத்தகத்தில் தான் பந்தை பல முறை சேதம் செய்துள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதனைத் தவறு என்று கூறாமல் பந்தைச் சேதம் செய்வதை விதிமுறையாக்கவேண்டும் என்று வேறு மற்றொரு குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார் அக்தர்.
மேலும் இந்த நூலில் பாகிஸ்தான் கிரிக்கெட் நடத்தப்படும் விதம் பற்றிய தாறுமாறான தாக்குதல் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மியான்டட், வாசிம் அக்ரம், ஏன் பர்வேஸ் முஷாரப்பையும் அக்தர் இந்த புத்தகத்தில் விட்டுவைக்கவில்லையாம்.
ஷோயப் அக்தரின் நெருங்கிய இந்திய நண்பர் சுதேஷ் ராஜ்புட் என்பவரது அறிவுரையின் படி இந்த சுயசரிதையை தான் எழுதியதாக அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சச்சின் டெண்டுல்கர், இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற அச்சமூட்டும் பந்து வீச்சாளர்களைச் சந்தித்து விட்டு பிறகு இயன் பிஷப், கார்ட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்புரோஸ் என்று அனைவருக்கு எதிராகவும் கொடி நாட்டியபிறகே ஷோயப் அக்தர் மிகவும் தாமதாக கிரிக்கெட்டிற்குள் நுழைகிறார். அப்போது சச்சின் இவரைக் கண்டு அஞ்சினார் என்று கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை.
மேலும் டெஸ்ட் மட்டத்திற்கு உயரும் எந்த ஒரு வீரரும் ஒரு வீச்சாளரைக் கண்டு அஞ்சுவது என்பது நடக்காத விஷயம். இது சச்சினுக்கு மட்டுமல்ல கடைசி வீரராகக் களமிறங்கும் இஷாந்த் ஷர்மாவுக்கும் பொருந்தும்.
அக்தர் புத்தகம் விற்பதற்காக புகழ்பெற்றவர்களை வம்பிற்கு இழுத்துள்ளார் என்பது வெளிப்படை.