இந்திய ஊடகங்களில் எப்போது பார்த்தாலும் இந்தச் சச்சின் டெண்டுல்கரைக் கட்டிக் கொண்டு மாரடிப்பார்கள். அவர் சட்டையைக் கழற்றினால் செய்தி, சட்டையைப் போட்டால் செய்தி! ஆனால் மிகவும் மௌனமாக மேற்கிந்திய அணியின் 'ஒன் மேன் ஆர்மி' என்று அழைக்கப்படும் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்துள்ளார். ஆனால் இதுபற்றி வெறும் செய்தி மட்டுமே வெளியாகியுள்ளது.
ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து, கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி, ஐ.பி.எல். பணமழையில் நனைந்து மீடியா புகழில் திளைத்து 'ஆகா பெரிய பேட்ஸ்மென்' என்று புகழ்ந்து தள்ளும் ஊடகங்கள், சந்தர்பால் எந்த வித விளம்பரமும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டையும் நாட்டிற்காக கிரிக்கெட் ஆடுவதையும் ஒரு பெரும் கடமையாகச் செய்து வருவது குறித்து ஒன்றும் எழுதாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மேற்கிந்திய அணி மிகவும் கடினமான காலங்களில் தோல்விகளாக சந்தித்து வரும் நிலையில் சந்தர்பால் மட்டுமே அங்கு சிறப்பாக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தால் புகழ் மழையால் அவரை நனைக்கும் ஊடகங்கள், சந்தர்பால் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக வைத்திருக்கும் சராசரி எவ்வளவு என்று கூட தெரியாமல்தான் உள்ளது.
நேற்று மேற்கிந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வந்த நிலையில், பிளந்து கொண்டிருக்கும் பிட்சில் அவர் போராடி 69 ரன்களை எடுத்தார். அவரை வீழ்த்துவது நாளாக நாளாக பந்து வீச்சாளர்களுக்கு பெரும் கடினமாக இருந்து வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டே சிறந்த வடிவம் அதில் சிறப்பாக விளையாடுவதிலேயே மகிழ்ச்சி உள்ளது என்று சந்தர்பால் நேற்று இந்த சாதனைக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
140வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்பால் 10,000 ரன்களை கிட்டத்தட்ட 50 ரன்கள் சராசரியில் பெற்றுள்ளார். இதில் 25 சதங்கள் 57 அரைசதங்கள் அடங்கும்.
இதில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, கிளென் மெக்ரா, ஜேசன் கில்லஸ்பி, ஷேன் வார்ன், மெகில் ஆகிய ஜாம்பவான்களுக்கு எதிராக 64 பந்துகளில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
விவ் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 54 பந்துகளில் சதம் எடுத்த பிறகு அதிவேக சத சாதனையை 'மந்தமான' 'கவர்ச்சியற்ற'என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்த சந்தபால்தான் எடுத்துள்ளார்!
ஒரு நாள் போட்டிகளிலும் சளைத்தவர் இல்லை சந்தர்பால் 268 போட்டிகளில் 8,778 ரன்களை சுமார் 42 ரன்கள் சராசரியில் பெற்றுள்ளார்.
மேற்கிந்திய அணியில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் சந்தர்பால், முதலில் பிரையன் லாராதான் இந்த மைல்கல்லை எட்டினார்.
அங்கெல்லாம் கிரிக்கெட் என்பது அவ்வளவுதான்! ரோகன் கன் ஹாய், சோபர்ஸ்,விவ் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், காளிச்சரண், லாய்ட் என்று எவரை எடுத்துக் கொண்டாலும் 7 ஆண்டு அல்லது அதிகபட்சம் 8 ஆண்டுகள் விளையாடுவார்கள். ஆனால் அந்தக் காலக்கட்டங்களில் அந்த அணி யாராலும் வீழ்த்த முடியாத அணியாகத் திகழும்.
மாறாக சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை எடுத்தவர். சதங்களில் மட்டுமே 10,000 ரன்களைக் கடந்தவர் ஆனால் அவர் இருக்கும் போதே இந்திய அணி எவ்வளவு கேவலமான தோல்விகளைச் சந்தித்துள்ளது! கடைசியாக இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக வாங்கிய 8- 0 உதை நினைவுக்கு வருகிறது. இன்னும் பல போட்டிகள் நினவுக்கு வருகிறது!
அவர் எத்த 100வது சதம் கூட சுயநல சதம்தான் இந்திய அணி அன்று வங்கதேசத்துடன் தோல்வி தழுவியது. இவரது மந்தமான ஆட்டத்தினால் 300 ரன்களுக்கும் மேல் சென்றிருக்க வேண்டிய இலக்கு 300 ரன்களுக்கு கீழ் இருந்ததால் வங்கதேசம் எளிய வெற்றி பெற்றது.
FILE
நாம் சந்தர்பாலுக்குத் திரும்புவோம். மேற்கிந்திய கிரிக்கெட்டிற்கு சந்தர்பால் ஆற்றிய சேவை அளப்பரியது. இங்கு போல் பல முனைகளிலும் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு அதிகார மையத்துடனும் வணிக ஜாம்பவான்களுடனும் தோளில் கையைப் போட்டு கொண்டு இருக்கும் 'பாக்கியம்' எல்லாம் சந்தர்பாலுக்கு இல்லை.
மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளபோது தொடர்ந்து நாட்டுக்காக விளையாடி வருகிறார் சந்தர்பால். அணியின் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், பெரிய அகத்தூண்டுதலாகவும் திகழ்கிறார்.
கிறிஸ் கெய்ல் போன்ற சுயநலமிகளுக்கு மத்தியில் மேற்கிந்திய கிரிக்கெட்டின் பழைய மதிப்பீடுகளை மீண்டும் தக்க வைக்க போராடி வருகிறார் சந்தர்பால்.
ஆனால் இவர் 'நான் கிரிக்கெட் ஆட்டத்தை நேசிக்கிறேன்' 'அது இல்லாமல் என்னால் வாழ முடியாது', 'என்னை ஓய்வு பெறச் சொல்பவர்கள் எனக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுக்கவில்லை' என்றெல்லாம் புளிப்பு கொடுப்பதில்லை. செயலில் காண்பிக்கிறார். மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் உள்ள நிலையில் நம் இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்திருந்தால் எவ்வளவு சச்சின் டெண்டுல்கர்கள், திராவிட்கள், லஷ்மண்கள், கங்கூலிகள் நம் நாட்டிற்காக விளையாடியிருப்பார்கள் என்பது சந்தேகமாக உள்ளது.
"அணிக்காகவும் மேற்கிந்திய கிரிக்கெட் ரசிகப்பெருமக்களுக்காகவும் நான் எனது கடைமையைச் செய்யவேண்டியுள்ளது' என்று கூறும் சந்தர்பாலின் பார்வைக்கும் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
சச்சின், சந்தர்பால் காலத்தில் சிறந்த எதிரணியாக இருந்து வரும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சந்தர்பால் 49.96 என்ற சராசரி வைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50.59 என்ற சராசரி வைத்துள்ளார்.
அதுவும் தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 11 டெஸ்ட்களில் 800 ரன்களை 42.05 என்ற சராசரியில் வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இவரது சராசரி 50 ரன்கள் அதில் இங்கிலாந்தில் அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 1164 ரன்களை 64.66 என்ற சராசரியில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2010, 2011, 2012 ஆகிய 3 ஆண்டுகளில் 17 டெச்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சந்தர்பால் 1386 ரன்களை 50க்கும் மேலான சராசரியில் பெற்றுள்ளார். குறிப்பாக இந்த 3 ஆண்டுகளிலும் அவரது டெஸ்ட் சராசரி 50க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் 346 ரன்களை 86.50 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
ஒவ்வொரு நாட்டிற்கு எதிராகவும் இவரது சராசரி சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பு நோக்கத்தக்கது. ஆனால் இருவரது ஆட்டமும் முற்றிலும் வேறு வகையானது. சச்சின் டெண்டுல்கர் சில ஷாட்களை இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை. அல்லது மிகவும் தாமதமாக ஆடுகிறார்.
ஆனால் சந்தர்பால் எப்போது எப்படி ஆடுவார் என்று கணிக்க முடியாது. கோணலாக நின்று கொண்டு பாதி பந்துகளை ஆடாமல் விட்டு விடும் இவர்தான் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 64 பந்துகளில் சதம் விளாசியவர்.
சந்தர்பால் போன்ற அர்ப்பணிப்புள்ள கிரிக்கெட் வீரர்கள் இனி கிடைப்பது அரிதிலும் அரிது. சுனில் கவாஸ்கர் ஒரு காலத்தில் இந்திய அணிக்காக தனி மனிதனாக போராடி ஆடி வந்தாரே அதுபோல் சந்தர்பால், எனவே அவரை மேற்கிந்திய அணியின் சுனில் கவாஸ்கர் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்!