கேடிச் நீக்கம்; சாப்பல் கைவரிசையா?

வெள்ளி, 10 ஜூன் 2011 (16:12 IST)
FILE
கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து துவக்க வீரர் சைமன் கேடிச்சை நீக்கியது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. அதுவும் சைமன் கேடிச் நேற்று காரசாரமாக கொடுத்த பேட்டிக்குப் பிறகு சந்தேகம் பலதரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு வருகிறது.

கிரெக் சாப்பல் சமீபத்தில்தான் ஆஸ்ட்ரேலிய அணியின் தேர்வுக் குழுவில் திறமை அடையாளம் காணும் பிரிவில் தலைமை தேர்வாளராக இணைந்தார். திருவாளர் சாப்பல் பயிற்சியாளராக இந்தியாவைக் காலி செய்த வரலாற்றுப் பின்னணி இருக்க அவரைத் தேர்வாளர் பொறுப்பில் விட்டால் சும்மாவா இருப்பார்?

ஆனால் கேடிச் நீக்கத்தில் தேர்வுக் குழுத் தலைவர் ஆண்ட்ரூ ஹில்டிச், வெளியே செல்லவுள்ள டேவிட் பூன், ஜேமி கோக்ஸ் ஆகிய பெயர்களும் அடிபடுகின்றன.

ஆஷஸ் தொடருக்கான அணியை இப்போதுஏ 'மார்க்கெட்' செய்வதில் கிரிக்கெட் வாரிய ஸ்பான்சர்கள் விரும்புவதால் உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர்கள் துவங்கும் முன்பே ஒப்பந்த வீரர்களை அறிவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதுவே சைமன் கேடிச்சை நீக்குவதற்குக் காரணமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் ஏதாவது 'சாதனை' செய்யத் துடிக்கும் கிரெக் சாப்பலும் இதில் இருப்பதால் சந்தேகம் அவர் மீது எழுவது நியாயமே. அதுவும் அவரது பயிற்சியில் ஏற்ப்ட்ட இந்திய அணியின் அனுபவத்திற்குப் பிறகு நாம் கேடிச்சின் நீக்கத்தில் அவரது பங்கு இருக்காது என்று உறுதியாகக் கூறமுடியாது என்றே தோன்றுகிறது.

2008ஆம் ஆண்டு அணிக்குள் மீண்டும் அழைக்கப்பட்ட சைமன் கேடிச் முன்பு நடுக்கள வீரராக களமிறங்கி நிறைய ரன்களை எடுத்தவர்தான், அதன் பிறகு ஒருமுறை நீக்கப்பட்டு அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் நியூசவுத்வேல்ஸ் கேப்டனாகக் களமிறங்கி அணியை தனது தலைமையின் கீழ் இறுதி வரை நகர்த்தியதோடு, முச்சதம் ஒன்றை எடுத்து தன்னை ஆஸ்ட்ரேலிய அணியில் தேர்வு செய்யப் பணித்தார். மீண்டும் 2008ஆம் ஆண்டு துவக்க வீரராக களமிறங்கிய சைமன் கேடிச் அதன் பிறகு எடுத்துள்ள சராசரி 50 ரன்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 3 ஆண்டுகளில், ஆஸ்ட்ரேலிய அணியின் சரிவிலும் அதிகபட்ச ரன்களை எடுத்த இரண்டாம் வீரராகத் திகழவும் செய்தார்.

சாப்பல் போன்றவர்கள் எப்போதும் நன்றாக விளையாடுபவர்களை அணியிலிருந்து நீக்கி அதிலிருந்து எழும் சர்ச்சைகளில் தனது புகழைத் தக்க வைக்கும் குறுகிய மனோபாவம் கொண்டவர்கள்.

FILE
இந்தியாவில் வந்து ஊடகங்களின் ஒருசிலரை தன் கையில் வைத்துக் கொண்டு கங்கூலி பற்றி தவறான செய்திகளைப் பரப்பி அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க அடிவேலை செய்தவர் கிரெக் சாப்பல்.

கங்கூலியை ஒழித்துக் கட்ட முயற்சி செய்ததும், தற்போது கேடிச்சை ஒழித்ததும் திருவாளர் கிரெக் சாப்பல் பணியாகவே இருக்கலாம் என்று ஆஸ்ட்ரேலிய ஊடகங்களில் எழுதும் வர்ணனையாளர்களில் பலர் சந்தேகிக்கின்றனர்.

இங்கு வந்தவுடன் அவர் முதலில் ஒழிக்க முயன்றது கங்கூலியை, அதன் பிறகு லஷ்மணை ஒருநாள் அணியிலிருந்து விரட்டினார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சச்சின் தலையில் கையை வைத்தார். 2007 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சச்சினை 4ஆம் நிலையில் களமிறங்கப் பணித்தவர் கிரெக் சாப்பல். அதன் விளைவுகளை நாடே அறியும்.

பிறகு சேவாகைக் காலி செய்தார். பிறகு யுவ்ராஜ், ஹர்பஜன் சிங் என்று கைவரிசையைக் காட்ட முயன்றார். ஜாகீர் கானை சுத்தமாகவே ஒழித்தார். அப்போது அவர் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வந்தார்.

இர்ஃபான் பத்தான் என்ற ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரை இந்தியாவுக்கு வரவிடாமல் அடித்தவர்தான் இந்த கிரெக் சாப்பல்.

இவரது 'திருப்பணி' தற்போது ஆஸ்ட்ரேலியாவில் தொடங்கியுள்ளது. இது கேடிச்சில் துவங்கியுள்ளது. இன்னும் எதில் போய் முடியும் என்று ஆஸ்ட்ரேலியர்கள் பொறுமையுடன் பார்க்க வேண்டிய தலை விதியாகிவிட்டது.

சாப்பல் வந்ததிலிருந்தே அணித் தேர்வில் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. ஷேன் வார்ன் ஓய்வு பெற்றவுடன் இதுவரை ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஒரு 10 ஸ்பின்னர்கள் வரை வந்து சென்றனர். நேதன் ஹாரிட்ஸ் நன்றாக விளையாடியும் அவர் திடீரென நீக்கப்பட்டார். கேமரூன் ஒயிட், டோஹெர்டி, கிரேஜா, மெக்கைன், ஸ்டீவ் ஸ்மித், பியூ கஸான், மைக்கேல் பியர் என்று அனைவரும் வந்தனர் ஒருவரும் தங்கவில்லை.

வேகப்பந்து வீச்சில் அதேபோல் ஹில்ஃபென்ஹாஸ் ஓரளவுக்கு நன்றாக விளையாடியும் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இளைஞர்களை அணியில் கொண்டு வரவேண்டும் என்றுதான் கிரெக் சாப்பல் இதனைக் கூறுவார். மேலும் 'மாற்றம் என்ற கட்டத்தில் உள்ளோம்' என்பார். இளைஞர்களை அணியில் கொண்டு வரவேண்டாம் என்று கூறுவது நம் நோக்கமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மூத்த வீரர்களுடன் அவர்களையும் விளையாடிப் பழக்கவேண்டும்.

ஆனால் இதுபோன்ற நோக்கங்களுக்காக சாப்பல் இல்லை. அவர் வந்தவுடன் சீனியர் வீரரை, அதுவும் நன்றாக விளையாடி வரும் வீரரை வீட்டுக்கு அனுப்பி பெயரும் புகழும் பெறவேண்டும். அது எவ்வளவு வெறுப்படைந்த புகழாக இருந்தாலும் சாப்பல் தயங்குவதில்லை.

பேட்ஸ்மென் என்றால் ரன் எடுக்க வேண்டும், பந்து வீச்சாளர் என்றால் விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும் என்று கிரிக்கெட் கீதை உபதேசித்த கிரெக் சாப்பல் உள்ளிட்ட ஆஸி. தேர்வுக் கும்பல் தற்போது ஸ்கோர்புத்தகத்தைப் பார்க்காமலேயே கேடிச்சை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

உள்ளபடியே சைமன் கேடிச்தான் அணித் தலைமைக்கான திற்மை அதிகம் வாய்ந்தவர். ரிக்கி பாண்டிங்கைக் காட்டிலும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள மைக்கேல் கிளார்க்கைக் காட்டிலும் கேடிச் சிறந்த அணித் தலைவர்.

மற்ற அணிகளுக்கெல்லாம் குருப்பெயர்ச்சி தொடங்கியுள்ள நிலையில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு சனிப்பெயர்ச்சி தொடங்கிவிட்டது.

சாப்பல் போன்ற 'மேதை' களெல்லாம் உலகத்தின் எந்த நீதிக்கும் கட்டுப்படாதவர்கள். அவர் கிரிக்கெட் பற்றிய விவகாரங்களில் தலையிடாமல் இருக்க 3 ஹெக்டேர் நிலத்தில் நல்ல ஒரு பங்களா கட்டிக் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். அதாவது அவர் கிரிக்கெட் போன்ற விவகாரங்களில் தலையிடாமல் இருக்கச்செய்ய அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அந்த நாட்டின் கிரிக்கெட் அமைப்பின் கடமையாகும்.

யோசிக்குமா ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அமைப்பு?

வெப்துனியாவைப் படிக்கவும்