கிரிக்கெட் வீரர்களைப் புரிந்து கொள்ளாத வாரியங்கள்

சனி, 23 ஏப்ரல் 2011 (16:13 IST)
PTI Photo
FILE
நியூஸீலாந்தில் ஷேன் பாண்ட், இங்கிலாந்தில் பிளிண்டாஃப், மேற்கிந்திய தீவுகளில் கிறிஸ் கெய்ல் ஆகியோரை தொடர்ந்து தற்போது இலங்கையின் லசித் மலிங்காவும் கிரிக்கெட் வாரியங்கள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக அதிரடி முடிவை எடுக்க நேரிட்டுள்ளது. வாரியம் கொடுத்த நெருக்கடியால் டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று உதறி விட்டார் மலிங்கா.

விளையாட்டு என்பதே திறமை தொடர்பானது. திறமை எவ்வளவு ஆண்டுகளுக்கு இருக்கிறதோ அது வரைதான் விளையாட்டு வீரருக்கு மதிப்பு மரியாதை, பணம் எல்லாம். ஒரு வீரர் நன்றாக விளையாடிய காலத்தில் எவ்வளவு 'தேச பக்தராக' இருந்தாலும் திறமை போய்விட்டால் அவரது தேசப்பக்திக்காக எந்த வாரியமாவது அணியில் வைத்திருக்குமா?

இதனைப் பற்றி கிரிக்கெட் வாரியங்களில் உள்ள 'தலைகள்', என்ன நினைக்கிறது என்றால், பணத்தாசை பிடித்து நாட்டுக்காக விளையாடுவதைக் கூட பொருட்படுத்தாத வீரர்கள் என்ற எண்ணத்தை தாங்கள் வளர்த்துக் கொள்வதோடு, பொது மக்கள் மனத்திலும் வீரர்கள் பற்றிய இது போன்ற ஒரு அவதூறை ஏற்படுத்துகின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்கள் நன்றாகப் பணம் ஈட்டுகிறார்கள். ஆம்! ஆனால் அதற்காகடின உழைப்பை வெளிப்படுத்துவதும் அவசியம். இதனை ஒரு பொழுது போக்கு கிரிக்கெட் என்றாலும் உழைப்பு அளவில் எல்லாம் ஒன்றுதான். சினிமா ஒரு பொழுதுபோக்குக் கலைதான் ஆனால் ஒரு சினிமாவை எடுக்க எவ்வளவு முட்டி மோதுகிறார்கள். எவ்வளவு செலவு, எவ்வளவு உழைப்பு...!

ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்காக பாண்ட், பிளிண்டாஃப், மலிங்கா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டை உதறுகின்றனர் என்று குற்றம்சாட்டினால் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்பு 'தேச'த்திற்காக விளையாடி காயமடைந்து, உடல் நிலை மோசமான வீரர்கள் பலருக்கு இந்த கிரிக்கெட் வாரியங்கள் என்ன கிழித்து விட்டது என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டும்.

ஒரு வேகப்பந்து வீச்சாளரின் காலம் எவ்வளவு? பொதுவாகவே அனைவரும் சச்சின், ஸ்டீவ் வாஹ் போன்று 15 ஆண்டு, 20 ஆண்டுகள் வரை விளையாட முடிவதில்லை. குறிப்பாக பந்து வீச்சாளர்களின் காலம் 6 முதல் 7 ஆண்டுகள்தான். அதுதான் அவர்கள் உச்சத்தில் இருக்கும் காலம்.

அதுவும் காயமடையாமல் இருப்பது அவசியம். காயமடைந்தால் நம் தேசப்பற்று வாரியத் தலைகளா வந்து காப்பாற்றப் போகிறது? சொந்தக் காசில்தான் சிகிச்சை பெறவேண்டியுள்ளது.

மேலும் 18 வயதில் ஒரு வீரர் விளையாட வருகிறார் என்றால் அவர் எம்.பி.ஏ. ட்ரிப்ளி, எம்.பி.பி.எஸ். படித்து விட்டா வருகிறார்? நேராக பள்ளி அல்லது தெரு கிரிக்கெட்டில்லிருந்து லீக், மாவட்டம், மாநிலம் பிறகு நாட்டு அணிக்குள் வருகின்றனர்.

PTI Photo
FILE
இப்படியிருக்கையில் ஒரு வீரர் தன் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்து முடிவெடுப்பதில் என்ன தவறிருக்க முடியும்?

ஷேன் பாண்ட் ஐ.சி.எல். கிரிக்கெட்டைத் தேர்வு செய்தபோது பலரும் அவரை ஏதோ ஒரு தேசத் துரோகி போல் பேசினர், ஏசினர். ஆனால் அவர் தெளிவாக இருந்தார். என் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு ஐ.சி.எல். அல்லது ஐ.பி.எல். பாதுகாப்பாக இருக்கிறது என்றால் நியூசீலாந்தை விட இந்த கிரிக்கெட்டைத்தான் நான் தேர்வு செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கிறிஸ் கெய்ல் விவகாரம் என்னவாயிற்று? 4வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஏலத்தில் கெய்லை ஒரு அணியும் எடுக்கவில்லை. 3 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி பணம் கிடைத்தது, நன்றாக விளையாடவும் செய்தார். ஆனால் 4வது ஐ.பி.எல்.இல் கழட்டி விடப்படுகிறார். அவரது எதிர்காலம் என்ன? அவர் என்ன மேற்கிந்திய தீவுகளில் பெப்சி, அல்லது கோலா நிறுவனத்தில் தலைமை இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டே கிரிக்கெட் விளையாடுகிறாரா?

ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இதனால் மேற்கிந்திய அணிக்கு விளையாடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார் கெய்ல் ஆனால் அதிலும் மண் விழுந்தது. அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்தால் 'தேசம் அழைக்கிறது தம்பி உடனே நீ வந்து விடு' என்று அழைப்பு விடும் வாரியத் தலைகள், அவர் ஐ.பி.எல். விளையாடாமல் இருக்கும்போது தேச அணிக்கு தேர்வு செய்ய மறுக்கிறது.

அதேபோல்தான் மலிங்கா விவகாரமும் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது அதில் விளையாடுவது அவசியம் என்று இலங்கை வாரியம் கருதுகிறது. சரி! ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்ன ரப்பர் பந்திலா பந்து வீசிக் கொண்டிருக்கிறார்? அல்லது நின்ற இடத்திலிருந்து பந்தை தூக்கி வீசிக்கொண்டிருக்கிறாரா? எல்லா ஆட்டங்களில் மணிக்கு 145 கிமீ வேக யார்க்கர்களை அவர் வீசித்தான் வருகிறார். என்ன பயிற்சி ஆட்டம் தேவைப்படும் அவருக்கு?

வாரியங்களில் உள்ள தலைகளில் பல முன்னாள் வீரர்கள் என்ற ஹோதாவில் தாங்களால் சம்பாதிக்க முடியவில்லையே என்ற பொறாமையில் தேசம், நாடு என்று கதை விட்டுக் கொண்டு வீரர்களை சம்பாதிக்க விடாமல் முட்டுக் கட்டை போட்டு வருகிறார்கள். இதுதான் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்திலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்திலும் நடக்கிறது.

PTI Photo
FILE
வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் பாதுகாப்பின்மைக்கு இன்னொரு கண்கண்ட உதாரணம் நம் தமிழக் வீரர் லஷ்மிபதி பாலாஜி. அவர் பாகிஸ்தானிலும், ஆஸ்ட்ரேலியாவிலும் பந்து வீசி நாட்டுக்காக திறமையை வெளிப்படுத்தியபோது அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிய இந்திய ஊடகங்களும் சரி வாரியமும் சரி, அவர் காயமடைந்து 2 ஆண்டுகள் விளையாட முடியாமல் போனபோது எங்கு சென்றன. அப்போது வேறு ஒரு வீரருக்கு தேசப்பற்றை ஊட்டிக் கொண்டிருந்தது போலும்?

இவர்கள் அமைப்பில் உட்கார்ந்து கொண்டு ஒப்பந்தம் என்ற பெயரில் வீரர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். விளம்பர ஒப்பந்தங்களில் நடிக்காதே என்பது, வாரியத்தின் அதிகாரபூர்வ விளம்பரதாரர்களின் நலன்களுக்கு எதிரான விளம்பரங்களில் நடிக்காதே என்பது, வெளியில் பேட்டி கொடுக்காதே என்பது, பார்ட்டியில் கலந்து கொள்ளாதே என்பது, தண்ணியடிக்காதே என்பது. இவையெல்லாம் என்ன? தங்களால் இனி ஒரு போதும் செய்ய முடியாத காரியங்களை இந்த வீரர்கள் செய்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனரே, நன்றாக பணம் ஈட்டுகின்றனரே என்ற வயிற்றெரிச்சலில் இருக்கின்றனர் வாரியத்தில் உள்ள முன்னாள் தலைகள்.

அரசியல்வாதிகளுக்கு தங்களைத் தவிர உலகில் எவன் பணம் சம்பாதித்தாலும் பொறுக்காது. அதே போல்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் உள்ளவர்களும்.

ஆஸ்ட்ரேலியா கிரிக்கெட் வாரியம் மட்டும்தான் இந்த விவரங்களை நன்றாகக் கையாள்கிறது. வீரர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறது. ஒரு தொடருக்கு முன்னால் ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தொடர்கிறாயா அல்லது வந்து விடுகிறாயா என்றெல்லாம் கேட்பதில்லை. வாரியத்திற்கு ஒரு வீரர் குறிப்பிட்ட தேதிக்குள் ரிப்போர்ட் செய்யவேண்டும். இல்லையெனில் அவர் தேர்வுக்கு பரிசீலனை செய்யப்படமாட்டார். ஆனால் இதில் எந்த வித வருத்தமோ, தேசப்பற்று பிரச்சனைகளையோ அவர்கள் எதிர்கொள்வதில்லை.

எந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடினாலும் எந்த விதமான கிரிக்கெட்டை ஆடினாலும் அது தரமான கிரிக்கெட் ஆட்டமாக இருக்கிறதா என்பதை மட்டும் வாரியம் பார்த்து அதனை தேச அணியின் தேர்வுக்கு ஒரு அளவு கோலாக எடுத்துக் கொள்வது நல்லது.

வாரியங்களின் போக்கு மாறினால்தான் மலிங்கா, கிறிஸ் கெய்ல், ஷேன் பாண்ட் போன்ற அசாத்திய திறமைகளை இழக்காமல் இருக்க முடியும். வாரியங்கள் யோசிக்குமா?

வெப்துனியாவைப் படிக்கவும்