டோமினிகாவில் நேற்று முடிந்த இந்திய, மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வேண்டுமென்றே டிரா செய்யபட்டது. .
முதலில் மேற்கிந்திய அணியின் சந்தர்பால், ஃபிடல் எட்வர்ட்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியது. பந்து வீச்சாளர்களுக்கு ஒன்றுமேயில்லாத ஆட்டக்களத்தில் சந்தர்பால் 23-வது சதத்தை எடுத்தார். இந்தியாவுக்கு 47 ஓவர்களில் வெற்றி இலக்கு 180 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
உலகின் நபர் ஒன் அணி என்று வந்த பிறகு 47 ஓவர்களுக்குள் நாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என்ற ஒரு அச்சம் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனிக்கே இருந்தால் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி அதுவும் இளம் வீரர்கள் எவ்வாறு தன்னம்பிக்கை பெறுவார்கள்?
இந்த டெஸ்ட் போட்டியில் கடைசியில் 15 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி பெற 86 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா 94/3 என்று சற்றே வலுவான நிலையில் இருக்கும்போது இரு கேப்டன்களும் கைகுலுக்கி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது, மைதானத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும் ஏமாற்றுவதற்குச் சமம் ஆகும்.
47 ஓவர்களில் 180 ரன்கள் என்பது ஒரு சாதாரண இலக்கு என்று கூறவில்லை. 5ஆம் நாள் பிட்சில் அது கடினமானது. அதுவும் கம்பீர், சேவாக், சச்சின் இல்லாத நிலையில் அத்தகைய துரத்தலை நாம் சாதிக்க இயலாது என்ற எண்ணெமெல்லாம் சரிதான். எனினும் அதற்கான முயற்சி கூட இல்லாமல் அப்படியே டிராவுக்காக ஆடுவது நிச்சயம் நம்பர் 1 நிலைக்கு இந்திய அணி லாயக்கல்ல என்பதையே அறிவிக்கிறது.
மேலும் கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொல்லும் விதமாக கடைசி 15 ஓவர்களை விளையாடாமலே கேப்டன்கள் கைகுலுக்கி முடித்துக் கொள்வது பொறுக்க முடியாத அடாவடித்தனமாகும்.
இதுவே இந்தத் தொடரை வென்றால் வீரர்களுக்கு தலைக்கு ஒரு அருமையான சொகுசு வீடு அல்லது கார் அல்லது கூடுதல் பணம் அளிக்கப்படும் என்றால் ஒருவேளை 30 ஓவர்களில் இந்த இலக்கை எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நமது கேள்வி ஏன் வெற்றி பெற முயற்சி செய்யவில்லை என்பதல்ல? கடைசி 15 ஓவர்களை விளையாடாமல் போனது ஏன் என்பதே?
இதற்கு தோனி அளித்துள்ள பதில் கேப்டன் தகுதிக்கு அருகதையற்ற வார்த்தைகள் என்பதை உணர்த்துகின்றன. இலக்கை நோக்கிச் சென்றிருந்தால் இந்திய அணி தோற்றிருக்கும் என்று கூறுகிறார்.
பயிற்சியாளர் பிளெட்சராவது சற்று நிதானத்துடன் 40 ரன்னில் இருக்கும் ஒரு பேட்ஸ்மென் ரன் எடுக்க முடியவில்லை புதிதாக களமிறங்கும் வீரர் எப்படி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் நாம் கேட்பது என்னவெனில் 15 ஓவர்கள் முன்னமேயே ஆட்டம் முடிக்கப்பட ஏன் ஒப்புக்கொள்ளப்பட்டது?
FILE
ஐ.சி.சி. விதிமுறைகளில் மாற்றங்கள் தேவை. இந்தியா தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை டிரா செய்து நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்த அன்று கேப்டன் ஸ்மித் 15 ஓவகளுக்கு முன்பு ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாமா என்று தோனியிடம் கேட்டாரா? அப்படி கேட்டிருந்தால் தோனி ஒப்புக் கொண்டிருப்பாரா?
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்றதில் மேற்கிந்திய கேப்டன் டேரன் சாமியும் காரணம், அவரும் ஏன் அவ்வளவு ஓவர்கள் மீதமிருக்கும்போது ஆட்டத்தை முடிக்க ஒப்புக் கொண்டார்?
இரு அணிகளும் ஆட்டத்தை அதன் உணர்வுடன் நடத்தி கடைசி வரை வெற்றி தோல்வி முடிவுக்காக விளையாடுவதுதான் விளையாட்டின் சாராம்சமான ஒரு உணர்வு. ஆனால் இங்கு தோனியும், சாமியும் செய்தது மன்னிக்கபட முடியாதது.
மற்ற அணிகள் வெற்றிக்குச் சென்றிருக்குமா என்ற விவாதம் தவறானது. ஏனெனில் இந்த சூழ்நிலையில் இல்லாத மற்ற அணிகளைப் பற்றி நாம் கூறுவதற்கொன்றுமில்லை.
ஆனால் ரிக்கி பாண்டிங்கோ, ஸ்டீவ் வாஹோ இந்த இடத்தில் இருந்திருந்தால் ஏன் டேரன் சாமி பேட்டிங் செய்து கொண்டிருந்தால் கூடவோ, இந்த முடிவை நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள்.
2004ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் மற்றும் தொடர் தோல்வி அச்சம் இருந்தும் தனது கடைசி டெஸ்ட் தொடர் டிராவாக இருக்கட்டும் என்று ஸ்டீவ் வாஹ் நினைக்கவில்லை. ஆட்டத்தை கடைசி வரை ஆடியே தீரவேண்டும் என்றே விரும்பினார்.
உலகெங்கும் தொலைக்காட்சியிலும், மைதானத்தில் நேரில் பார்க்கவருபவர்களும் கிரிக்கெட் ஆட்டத்தைத்தான் பார்க்க வருகிறார்கள். அதில்தான் தோனி என்ற தனி நபர் என்ன செய்கிறார், இந்தியா ஒரு அணியாக வெற்றியை நோக்கிச் செல்கிறதா என்ற கேள்வியெல்லாம் ஆர்வங்களெல்லாம் வருகிறது. இப்படியிருக்கையில் இரு அணி கேப்டன்களும் இணைந்து கை குலுக்கிக் கொண்டு ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எப்படி முடிவெடுக்கலாம்? இதுதான் ரசிகர்களின் உணர்வுக்கு எதிரானது, ஆட்டத்தை வீரர்கள் விளையாடினாலும் ரசிகர்கள் இல்லாவிட்டால் இவர்களால் நடுவில் நின்று மட்டையை உயர்த்தி, அந்தப் புகழை வைத்து விளம்பரங்களில் நடித்து கோடிகோடியாக பணம் சம்பாத்திக்கத்தான் முடியுமா?
இதுபோன்று கேப்டன்கள் முடிவெடுத்து கைகுலுக்கி ஆட்டத்தை முடித்துக் கொள்வதற்கு ஐ.சி.சி முதலில் தடை விதிக்கவேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டை வாழ வைக்க மஞ்சள் பந்து பயன்படுத்தலாமா வெள்ளைப்பந்து பயன்படுத்தலாமா என்பதையெல்லாம் விட கிரிக்கெட் ஆட்டத்தைக் கொல்லும் இதுபோன்ற சக்திகளைத் தண்டிக்க ஐ.சி.சி. முதலில் முட்வெடுக்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர் இருக்கும்போது மேற்கிந்திய அணியை 2- 0 என்று வீழ்த்தி சூப்பர் ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணி வெற்றிக்குத்தான் விளையாடும் என்பதை ஒரு அறிக்கையாக அறிவிக்கும்படியாக இந்த வெற்றியை பெற்றிருக்க வேண்டும் அல்லவா?
மாறாக துரத்தியிருந்தால் தொடரை வெற்றி பெற்றோம் என்பதை நிலையை இழந்திருப்போம் என்று கூறும் தோனி போன்றவர்களை ஊக்குவித்துப் பேசும் போக்கை நாம் கை விடவேண்டும்.
47 ஓவர்களில் நாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என்று நினைப்பதில் தோனியின் அணித்தலைமைப் பொறுப்பின் அருகதையின்மை தெரிகிறது என்றால், 15 ஓவர்களை விளையாடாமலே கைகுலுக்கி போட்டியை முடித்ததில் கிரிக்கெட் ஆட்டத்திற்கே அவர் துரோகம் இழைத்திருக்கிறார் என்று நாம் விமர்சனம் வைப்பது ஒருபோதும் கடுமையான விமர்சனம் ஆகாது!