ஐ.பி.எல்.: கிரிக்கெட் போர்வையில் ஒரு பொழுதுபோக்குச் சந்தை

திங்கள், 17 ஜனவரி 2011 (16:00 IST)
webdunia photo
FILE
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் என்பது ஊடகங்கள் பார்வையில் வெளிப்படையாக நடப்பது போல் தெரிந்தாலும் அது ஒரு புரியாத புதிராகவே நடைபெற்று வருகிறது. வீரர்களுக்கு செலவிடப்படவேண்டிய அதிகபட்ச தொகையில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு முறையாக அனுசரிக்கப்படுகிறதா அல்லது ஒப்பந்தத்திற்கு வெளியே மேலும் சில ரகசிய பரிமாற்றங்கள் நடைபெறுகிறதா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளது.

ஐ.பி.எல். இரண்டாவது தொடரின் போது ஒரு வீரர் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு ஒப்பந்தம் செய்தால் போதும் என்று கூறி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட தனது ஆர்வத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வீரரை எந்த அணியும் அப்போது சீந்தவேயில்லை. மாறாக தற்போது நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் அதே வீரரை ஒரு உயர்ந்த தொகைக்கு எந்த அணி அவரை வேண்டாம் என்று முன்பு கூறியதோ அதே அணி ஏலம் எடுத்துள்ளதஎன்றசெய்தி வட்டாரங்களதெரிவிக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? சில பல தொகைகளை அந்த வீரர் அணியின் நிர்வாகத்தில் ஒருவர் அல்லது இருவருடன் பகிர்ந்து கொள்வதில்தான் இது போய் முடிந்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.

தாராளமய பொருளாதாரத்தின் முதன்மை உபகரணமான சந்தைப்பொருளாதாரம் கிரிக்கெட் ஆட்டத்திலும் புகுந்து களேபரம் செய்யத் தொடங்கி விட்டது. லலித் மோடியை நீக்கி விட்டால் எல்லாமே பரிசுத்தமாக ஆகிவிடும் என்று பி.சி.சி.ஐ. ஊடகங்களை வைத்து மக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது.

உயர்ந்த ஆடைகள், நகைகள் அணிந்து ஏலத்தில் பங்கேற்குமவீரர்களை ஏலம் எடுக்கும் நபர்களால் இந்திய கிரிக்கெட்டை எப்படி முன்னெடுத்துச் செல்ல முடியும்?

கிரிக்கெட் ஆட்டத்தின் மரியாதை வெற்று சந்தை மதிப்பாகிவிட்டது. கம்பீர் அடிக்கும் ஆஃப் சைட் ஷாட்டை விட அவர் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதே ஊரெங்கும் பேச்சாக மாறிவிட்டது.

webdunia photo
FILE
ஏலத்திற்குள் வர முடியாத உள்நாட்டு வீரர்கள் பலர் உள்ளனர். அம்பாட்டி ராயுடு, மணீஷ் பாண்டே, ஆர். சதீஷ், முதல் 3 ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த்த் திரிவேதி, மும்பையின் தவால் குல்கர்னி, அஜயன்கா ரஹானே, இக்பால் அப்துல்லா, பெங்காலின் அபிஷேக் ஜுஞ்ஜுன்வாலா, 2-வது மற்றும் 3-வது ஐ.பி.எல். கிரிகெட்டில் அபாரமாக விளையாடிய ஹர்மீத் சிங், ரஜத் பாட்டியா, பரோடாவின் பினால் ஷா. ஆகிய வீரர்கள் ஏலத்தில் வர முடியாமல் மாநில அணியின் ஐ.பி.எல். உரிமையாளர்களின் ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது.

சௌரப் திவாரி 3 ஒருநாள் போட்டிகளை விளையாடியதால் ஏகப்பட்ட தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவருக்கும் வயது 20, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் சதம் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய கர்நாடகாவின் மணீஷ் பாண்டேயின் வயதும் 20. ஆனால் இவருக்கு வெறும் ரூ.20 லட்சம் மட்டுமே கிடைக்கும், இதனால் பாண்டே ஆர்.சி.பி. ஒப்பந்தத்தை உதறியாதாகக் கூறப்படுகிறது.

சிறப்பாக விளையாடாத உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரரகளுக்கு பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஏலத்தில் இடம்பெற முடியாது என்று விதிகள் மூலம் ஒதுக்கப்பட்ட வீரர்களுக்கு சிறிய அளவில் தொகை அளிக்கப்படுகிறது. இந்தப் பாகுபாட்டினால் நாளை இந்த வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடும் போது மோதல் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இது போன்ற குழப்பங்களால்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவீந்தர் ஜடேஜா அதிகப் பணத்திற்கு ஆசைப்பட்டு வேறொரு அணி உரிமையாளரிடம் பேசி அது அவரைத் தடை செய்வதில் போய் முடிந்தது.

இந்த வீரர்களுக்கு குறைந்த தொகை அளிக்கப்படுகிறது என்று கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மணீஷபான்டே, அம்பாட்டி ராயுடு போன்ற அதிரடி வீரர்களை விதிகளின் படி இந்தத் தொகைக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு வேறு பல வழிகளில் அவர்களது செல்வத்தைப் பெருக்கவும் ஐ.பி.எல். உரிமையாளர்கள் முனைந்தால், வீரர்களையும் சட்ட விரோதமாக சம்பாதிக்கததூண்டுவதில்தாநபோய் முடியும்.

அணி உரிமையாளர்கள் பணத்தை வைத்துக் கொண்டு இந்த வீரர்களைத் துரத்துகின்றனர். இவர்கள் அதற்கு பணிந்து விட்டு மாட்டிக்கொண்டால் அதோகதி. மாட்டிக்கொள்ளவில்லை என்றால் சுக வாழ்வு. இப்படியா நாட்டின் வருங்கால வீரர்களை உருவாக்குவது?

இளம் வீரர்கள் பணத்தாசையில் வீழ்ந்து விடக்கூடாது அதனால்தான் அந்த வீரர்களுக்கு குறைந்த தொகையை நிர்ணயித்துள்ளோம் என்ற வாதம் சொல்லளவில் சரியானதாக இருக்கலாம். ஆனா செயலில் அவ்வாறுதான் நடக்கிறதா என்பதை கண்காணிப்பது யார்?

இந்திய அணிக்கு இன்னமும் விளையாடாத ஆனால் திறமையான வீரர்களுக்கு தனி ஏலம் நடத்தவேண்டியதுதானே? அவர்களுக்கான அதிகபட்ச தொகையை ஐ.பி.எல். கிரிக்கெட் விதிகளே நிர்ணயம் செய்யலாமே? ஒரு புறம் ஒரு சில அனுபவ, அல்லது வெளியில் கடுமையாக விளம்பரங்களில் நடித்து வரும், மூத்த வீரர்களுக்குச் சாதகமாக விதிகளை அமைப்பது மறுபுறம் இளம் வீரர்கள் பணத்தாசையில் வீழ்ந்து விடக்கூடாது என்று நொண்டிச்சாக்குக் கூறுவது? ஐ.பி.எல். என்பது கிரிக்கெட் அல்ல, பணச்சந்தை, பொழுது போக்குச் சந்தை எனும்போது அனைவரும் ஏலத்தில் பங்கேற்கவேண்டியதுதானே?

கங்கூலி சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்தநிறைய விளம்பர ஒப்பந்தங்களில் இருந்திருந்தால் அவரை இப்போது ஒதுக்கியிருக்க மாட்டார்கள் என்பதையும் நம்மால் ஊகிக்க முடிகிறது.

விதிகள் நல்ல நோக்கத்தில் இயற்றப்படவில்லை. ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழுவில் உள்ளவர்களும், பி.சி.சி.ஐ.-யில் உள்ளவர்களுமே அணி உரிமையாளர்களாக இருக்கும் போது அவர்களது வணிக நலன்களுக்காகத்தானே அவர்கள் விதியை உருவாக்குவார்கள்!

மொத்தத்தில் கிரிக்கெட்டில் பெரிய அளவில் முன்னேறத் துடிக்கும் இளம் சச்சின் டெண்டுல்கர் போன்ற திறமைகளை போலி, பகட்டுக் கனவுக்கு ஆட்படுத்தி கிரிக்கெட் ஆட்டத்தை குறிப்பாக இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை அழிக்கும் செயலைத் தவிர ஐ.பி.எல். கிரிக்கெட்டினால் வேறு எதனையும் சாதித்து விட முடியாது.

உண்மையில் கிரிக்கெட் வளர்ச்சிக்காகச் செய்ய வேண்டுமெனில், மாநில அணிகளுக்கு இடையே இது போன்று இருபது ஓவர் கிரிக்கெட் திருவிழாவை நடத்தட்டும். அந்த அணிக்கு ஸ்பான்சர்களை வரவைக்கட்டும். ஒரு அணிக்கு இரண்டு அயல்நாட்டு வீரர்களை அனுமதிக்கட்டும்.

மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் போட்டிகள் நடைபெற்றால் அதில் பத்ரிநாத், தினேஷ் கார்த்திக், சதீஷ், விஜய் போன்றவர்கள் இரண்டு அயல் நாட்டு வீரர்களுடன் அதாவது டேல் ஸ்டெய்னுடனோ மேத்யூ ஹெய்டனுடனோ இணைந்து சச்சின் டெண்டுல்கர், டிவைன் பிராவோ, வாசிம் ஜாஃபர் ஷிகார் தவான், தவால் குல்கர்னி ஆகியோருக்கு எதிராக விளையாடட்டும்.

இந்த முறைதான் கிரிக்கெட்டை வளர்க்கும் வழி. அதனை விடுத்து வீரர்களை பணத்தை வைத்துக் கொண்டு துரத்தி மாடு பிடிப்பது போல் பிடித்து அவர்களின் வயதுக்கு மீறிய ஆசைகளை வளர்த்து விட்டு கிரிக்கெட் ஆட்டத்தைக் கொல்வதற்காகவா ஐ.பி.எல். கிரிக்கெட் உள்ளது?

கிரிக்கெட் எழுத்தாளரான பீட்டர் ரீபோக் கூறுவதை இங்கு சுட்டுவது பொருந்தும்:

"ஐ.பி.எல். இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தின் கிரிக்கெட் வடிவம் போல் தன்னை அளிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து கால்பந்து போட்டிகளும் 90நிமிடங்களே நடைபெறுகின்றன. இங்கிலீஷ் பிரிமியர் லீக் உண்மையான ஒன்று. ஐ.பி.எல். என்பது கிரிக்கெட் என்ற பெயரில் ஒரு பொழுதுபோக்கு. இதனால் உயிரோட்டத்தைக் கொண்டு வர முடியாது. அது உணவு கொடுக்கும் ஆனால் அடுத்தபடியாக ஆளை விழுங்கி விடும்."

வெப்துனியாவைப் படிக்கவும்