எந்த மொழியிலும் எனக்கு பிடிக்காத வார்த்தை ரிட்டையர்மென்ட் - சச்சின்

வியாழன், 30 ஆகஸ்ட் 2012 (18:00 IST)
ரமணா படத்தில் விஜயகாந்த் சொல்லும் ஒரு வசனம் தமிழ்நாடு முழுதும் பிரபலம். 'தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு' என்பார். அதுபோல் சச்சின் டெண்டுல்கர் எந்த மொழியிலும் எனக்குப் பிடிக்காத வார்த்தை ரிட்டையர்மென்ட் என்றுதான் கூறவில்லை!

இது குறித்து அவர் கூறியது இதோ:

"காலையில் ஒரு காரணத்துடன் எழுந்திருக்க காரணம் இருக்கும் வரையில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தமுள்ளது. எந்த நாள் என் கையில் பேட் இருப்பது எனக்கு எனக்கு மகிழ்ச்சியளிக்காமல் போகிறதோ அந்த நாளில் நான் கிரிக்கெட்டைத் துறப்பேன். அது போன்ற ஒரு உணர்வு வரும்போது அதனை உறுதி செய்வேன். இதனால் இப்போது ஓய்வு திட்டம் எதுவும் இல்லை. அணியில் சீனியர் வீரராக இருப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
FILE


உலக கோப்பை முடிந்த பிறகு ஒவ்வொருவரது எண்ணமும் எனது 100-வது சதத்தை பற்றிதான் இருந்தது. வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடிக்க நெருங்கி வந்தேன். துரதிருஷ்டவசமாக தவறவிட்டேன். டாக்காவில் 100-வது சதத்தை அடிக்க முடிந்தது" என்றார் சச்சின் டெண்டுல்கர்.

நான் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடும் வரையில் விளையாடுவேண் என்று கூறுகிறார் சச்சின்,! அய்யா உங்களுக்கு நீங்கள் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாப்பவர்களுக்கு அதுவும் சச்சினின் பழைய ஆட்டத்தைப் பார்த்தவர்கள் இப்போது சச்சின் ஆடும் ஆட்டத்தினால் பழைய ஆட்டத்தையே மறந்து விடும் நிலையே ஏற்பட்டுள்ளது.

பீட்டர்சன், பிளிண்டாஃப், சமீபமாக ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கிரிக்கெட் வரலாற்றில் ஓய்வு பெற்ற அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் தாங்கள் ஆடுவது சரியல்ல என்று உணர்ந்து வெளியேறியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான் நமக்குத் தெரிந்து விளையாடுவேன் என்று அபத்தமாக கூறிவருகிறார்.

ஜி.ஆர்.விஸ்வநாத் கடைசி காலத்தில் ஆடுவதுபோல் ஆடி அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டுதான் அவர் வெளியேறுவார் என்றால் அதனை யாரால் தடுக்க முடியும்?

லஷ்மண் போன்ற மகத்தான ஒரு வீரரிடம் 'இதுதான் உனக்கு கடைசி தொடர்' என்று கூற தைரியம் இருந்த அந்த குறிப்பிட்ட தேர்வாளர் சச்சினிடம் கூறினால் அவருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று அர்த்தம்!

2015 ஆம் ஆண்டு வரை ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் கண்டிப்பாக இருக்கவேன்டும். அது வரை நான் சொதப்பலாகவாவது விளையாடி ஒப்பேத்தி அணியில் இடம்பெறுவேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியில் நான் எனது ஆட்டம் எனக்கு மகிழ்ச்சி கொடுக்ககும் வரையில் விளையாடுவேன் என்று கூறுவதெல்லாம் பம்மாத்து அல்லாமல் வேறு என்னவாம்?

அன்று நியூசீலாந்து அணிக்கு எதிராக அவர் 19 ரன்களில் ஆட்டமிழந்த இன்னிங்ஸில் அவரது உடல் பேலன்ஸ் தவறிவிட்டது தெரிந்தது. அவரால் பழைய 'காம்பேக்ட் டிஃபன்ஸ்' வைக்க முடியவில்லை. நிறைய அடிக்க வேண்டிய பந்துகளை ஆடாமல் விடுகிறார் அல்லது பீல்டர் கைக்கு நேர் அடிக்கிறார்.

எவ்வளவு பெரிய கொம்பாக இருந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்ற குறைந்தபட்ச தன் மதிப்பீட்டை ஒரு வீரர் செய்து கொள்வதுதான் நல்லது. சுய மதிப்பீட்டில் கவனம் தேவை அது சச்சின் டெண்டுல்கருக்க்கு இருப்பதாக எள்ளளவும் இப்போது வரை தெரியவில்லை.

சுய விமர்சனம் மட்டுமே ஒரு முதிர்ச்சியுறாத மனிதனை முதிர்ச்சியுற்றவனாக மாற்றுகிறது. இந்த மட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் மேலும் முதிர்ச்சியை நோக்கி நகரவேண்டும். பின்னால் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். மனோஜ் திவாரி, உன்முக்த்த் சந்த், தமிழகத்தின் அபராஜித் என்று வீரர்கள் வரிசை உள்ளது.

இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் இவரது புகழையே பாடிக் கொண்டிருப்பது?

நல்ல முடிவெடுக்கும் முதிர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள் சச்சின்!

வெப்துனியாவைப் படிக்கவும்