இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் இந்தியா

வியாழன், 5 ஜனவரி 2012 (13:42 IST)
FILE
சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று வரலாற்றுத் தினமாக மாறியது. மைக்கேல் கிளார்க் 329 ரன்களை எடுத்தார். மூச்சதம் எடுத்த 31வது வீரரானார் கிளார்க். 468 ரன்கள் பின் தங்கியுள்ள இந்திய அணி 3ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

மார்க் டெய்லரின் 334 ரன்களையும் அவர் எடுக்க விரும்பவில்லை, லாராவின் 400 ரன்களையும் அவர் எடுக்க விரும்பவில்லை. சுயநலமற்ற ஆட்டம் என்றால் அதற்கு உதாரணம் இதுதான்.

ஒருமுறை டிராவிட் கேப்டனாக இருந்தபோது சச்சின் டெண்டுல்கர் 194 ரன்களில் இருந்தபோது பாகிஸ்தானுக்கு எதிராக டிக்ளேர் செய்தார். அப்போது சச்சின் அதனால் விரக்தியடைந்து புலம்பியதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மைக்கேல் கிளார்க் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பிருந்தும், எளிதாகிவிட்ட களத்தில் இந்தியாவை சுருட்ட போதிய நேரம் வேண்டும் என்பதால் டிக்ளேர் செய்துள்ளார். வெற்றிதான் முக்கியம் இதனை தோனியும், சாதனை வெறியர்களான இந்தியர்களும் கிளார்க்கிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் அஷ்வின் சிறப்பாக வீசினார், ஆனால் மீண்டும் தோனி தனது கேப்டன்சி மடைமையை வெளிப்படுத்தினார். உமேஷ் யாதவிற்கு இரண்டு ஷாட் மிட்விக்கெட்டை வைத்த தோனி, அஷ்வினுக்கு அந்த இடத்தில் ஆளை நிறுத்தவில்லை. தோனியின் களவியூகமும் அவரது எண்ணங்களும் சகிக்க முடியாத எல்லைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

FILE
2ஆம் நாள் காலை தோனி செய்த மட்டமான கேப்டன்சியினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒருமுறை நிற்க வைத்து விட்டால் அதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது. இன்றும் கூட தோனி 'விக்கெட்டுகளா? அப்படியென்றால் என்ன? கிலோ என்னவிலை' என்பது போல்தான் விட்டேத்தியாக கேப்டன்சி செய்தார். மைதானத்தின் பல இடங்களிலும் இடைவெளிகள் கிளார்க் இடது கையிலும், ஹஸ்ஸி வலது கையிலும்தான் ஆடவில்லை மற்றபடி எல்லா கோமாளித்தனங்களும் நடந்தது. ஒன்றுமேயில்லாத உப்புசப்பற்ற டெஸ்ட் ஆட்டமாக இதை மாற்றிய பெருமை தோனையே சாரும்.

ஆஸ்ட்ரேலியா டிக்ளேர் செய்தபோது இந்திய அணி களமிறங்கியவுடன் ஆட்டம் மீண்டும் சுவாரசியமாக மாறியது. நெருக்கமான பீல்டிங் அமைப்பு, அருமையான பந்து வீச்சு அனைத்திற்கும் மேலாக 468 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணிக்கு இருக்கும் பெரும் அழுத்தம்.

சேவாக் ஒரு பவுண்டரி அடித்தார் அவ்வளவுதான் தன் வேலை முடிந்ததென ஹில்ஃபென்ஹாஸ் வீசிய ஒன்றுமேயில்லாத வைடு பாலை தூக்கி அடிக்க முயல அதனை வார்னர் அபாரமாக எம்பிப் பிடித்தார். சக்தி வாய்ந்த ஷாட், ஆனால் வார்னர் கையில் பசை போல் ஒட்டிக் கொண்டது. அவரும் சரியாக எம்பினார்.



FILE
இந்த 2வது இன்னிங்ஸில் கம்பீர் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களுக்கு பெரும் கவலையாக இருந்தார். பாசிடிவாக துவங்கினார். கால்கள் நன்றாக நகரத் துவங்கின. பேட்டின்சனை ஒரு பளார் கட்டும், பீட்டர் சிடிலை இரண்டு அற்புதமான கவர் டிரைவும் அடித்து அவர் விளையாடி வர டிராவிடும் சற்றே உத்தியை மாற்றி விளையாடினார்.

பின்னங்காலில் சென்று விளையாடப் பழகினார். ஒரு புல் ஷாட், ஒரு கட் ஷாட், ஒரு அவரது பாணி ஆன் டிரைவ் என்று 6 பவுண்டரிகளை அவர் அடித்து 29 ரன்களில் ஆடி வந்த போது மீண்டும் இந்தியாவின் சுவரில் ஒரு செங்கல் பெயர்ந்தது. காலுக்கும், பேட்டிற்கும் பெரிய இடைவெளி உருவானது ஹில்ஃபென்ஹாஸ் குச்சியைப் பெயர்த்தார். 3வது முறையாக அவர் இவ்வாறு ஆட்டமிழக்கிறார். ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. இனிமேல் சுவரில் விழுந்த ஓட்டையை அடைக்க முடியாது.

கம்பீர் தொடர்ந்து அபாரமாக விளையாடி 9 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். ஆனால் அவர் அரைசதத்தை 51 பந்துகளில் எடுத்தார். அதன் பிறகு 73 பந்துகள் விளையாடி 18 ரன்களையே எடுத்தார். இது நல்லதல்ல. இந்த எதிர்மறைப்போக்கினால் கடைசியில் பேட்டின்சன் பந்தை எட்ஜ் செய்தார் நல்ல வேளையாக ஹேடின் அதனை கோட்டை விட்டார். தப்பித்தார் கம்பீர்.

சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் முடியப்போகிறது என்று ஆடினார். சுத்த சொதப்பல் ஆட்டம். ஹில்ஃபென் ஹாஸின் ஒரு பந்து ஏறக்குறைய பேட்டில் பட்டு லெக்ஸ்டம்பை சாய்த்திருக்கும் ஆனால் அது பவுண்டரிக்குச் சென்றது. டெண்டுல்கர் கடும் நெருக்கடியில் ஆடுவது தெரிந்தது.

இப்படி ஆடினார்ல் நாளை அவர் தாக்குப்பிடிப்பது கடினம். 42 பந்துகளில் 8 ரன்கள் எடுப்பதில் எந்த விதப் பயனும் இல்லை. இவர் நாளை பாசிடிவாக ஆடினால் இந்தியா மழையை எதிர்பார்த்து விக்கெட்டுகளைத் தக்கவைக்கலாம். டிராவிற்கான வாய்ப்பு உள்ளது.

இல்லையெனில் இன்று கடைசி 45 நிமிடங்களில் ஆடிய மனோநிலையில் கம்பீரோ, சச்சினோ ஆடினால் நாளை உணவு இடைவேளை முடிந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பேக்-அப் தான்.

இந்த ஆட்டக்களம் தற்போது பேட்டிங்கிற்கு எளிதாகிவிட்டது. எனவே பேட்ஸ்மென் தவறுகளில்தான் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற முடியும். அந்தத் தவறுகளைச் செய்ய நிச்சயம் கிளார்க் தூண்டுவார்.

எனவே இந்தப் போட்டியில் யார் வெல்கிறார்கள் என்பதே நாளைய ஆட்டத்தின் சுவாரசியமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்