இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை

திங்கள், 21 பிப்ரவரி 2011 (16:14 IST)
PTI Photo
FILE
இந்திய அணி கபில்தேவுக்குப் பிறகு பெரிய அளவில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை என்றாலும் சமீப காலங்களில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிகம் உருவாகின்றனர். ஆனாலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பலவீனமாகவே உள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் ஸ்ரீசாந்த் என்ற ஒருவர் நம்மைத் தோற்கடித்திருப்பார். காரணம் அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சமீப காலங்களில் விளையாடவில்லை. அந்த அனுபவமின்மையே பிட்ச் பற்றிய புரிதல் இல்லாமல் அவர் வீச நேர்ந்தது.

தற்போதைய அணியில் ஜாகீர் கான் மட்டுமே சீரான முறையில் வீசி நம்பிக்கை அளித்து வருகிறார். முனாஃப் படேலின் திசை மற்றும் அளவு சீராக இருந்ததற்குக் காரணம் அவர் அதிகம் வேகம் காட்டாமல் நேராக வீசுவதுதான். ஆனாலும் 370 ரன்கள் அல்லது 350 ரன்கள் அடிக்கும் போது அவர் பாதுகாப்பான வீச்சாளராக இருக்கலாம்.

நாளையே இந்தியா 250 ரன்கள்தான் எடுக்க முடிகிறது என்றபோது முனாஃப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த் கூட்டணி பயன்படாது என்பது தற்போது தெரிகிறது.

ஆஷிஷ் நெஹ்ரா சரியாக வீசவில்லை என்றால் அவர் பயிற்சியில் ஈடுபட வாய்ப்பளித்து உலக கோப்பைக்கு முந்தைய தொடர்களில் வினய் குமார், தவால் குல்கர்னி, பங்கஜ் சிங் போன்ற பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்து பரிசோதனை செய்திருக்கவேண்டும்.

ஆனால் இங்கு ஸ்ரீசாந்தே ஒருநாள் அணியில் இடம்பெறாமல் இருந்தார். அதான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோமே என்று பந்து வீச்சுத் துறையைப் பற்றி அணி நிர்வாகமும், அணித் தேர்வுக் குழுவும் அலட்சியமாக இருந்ததே இன்றைய இந்த நிலைக்குக் காரணமாகும்.

நெஹ்ரா சரியாக வீசவில்லை என்று கேப்டன் உணர்ந்தால் உடனடியாக அவரை விட வேகம் அதிகம் வீசி, சாதுரியத்தையும் பயன்படுத்தும் ஆர்.பி.சிங் போன்றவர்களை அழைத்திருக்கவேண்டும், அல்லது குறைந்தது இஷாந்த் ஷர்மாவையாவது தயார் படுத்தியிருக்கவேண்டும். இது ஒட்டுமொத்தமாக அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு.

webdunia photo
FILE
ஆனால் அணி நிர்வாகமும், அணித் தேர்வுக்குழுவும் எப்போதும் தாங்கள் செய்வது நன்மைக்கே என்ற நிலையில் இருப்பது சரியல்ல என்று தோன்றுகிறது.

இப்போது ஸ்ரீசாந்தை அடுத்த போட்டியில் உட்கார வைத்துவிட்டு நெஹ்ராவை அணியில் எடுப்பது என்பது வலது கை ஸ்ரீசாந்திற்குப் பதில் இடது கை ஸ்ரீசாந்தை எடுப்பது போல்தான். பயனிருக்கும் என்று தோன்றவில்லை.

எப்போது பிரவீண் குமார் விளையாட முடியவில்லை என்று தெரிந்ததோ அப்போதே மாற்று வீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யப்போவது பற்றி தெளிவான முடிவுகளை வைத்திருக்கவேண்டும்.

எனவே ஸ்ரீசாந்த் மேம்பாடு அடைகிறாரா என்பதை வலையில் உறுதி செய்தபிறகே அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும், இல்லையெனில் பியூஷ் சாவ்லா, அல்லது அஷ்வினை அணியில் தேர்வு செய்வது பாதுகாப்பானது.

இந்திய ஆட்டக்களங்களில் துவக்கத்திலேயே சுழற்பந்து வீச்சை ஒருமுனையில் வைத்துக் கொள்ளலாம். அது எதிரணியினரின் எதிர்பார்ப்பை நிலைகுலையச் செய்யும்.

ஜாகீர், முனாஃப் படேலுக்கு ஒரு ஆட்டம் மிகவும் சாதாரணமாக அமைந்து விட்டால் அது காலிறுதியாக இருக்குமானால் இந்திய அணிக்கு ஆபத்து உள்ளது.

எனவேதான் பிஷன் பேடி 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை என்றார். அதற்குப் பதில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை வைத்திருக்கவேண்டும்.

7 பேட்ஸ்மன், 4 பந்து வீச்சாளர் சேர்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் இந்த சேர்க்கைதான் சிறந்தது. ஆனால் சேவாக், கம்பீர், கோலி, சச்சின், தோனி, யூசுப் பத்தான், யுவ்ராஜ் கொண்ட வரிசையில் எப்படியும் 3 வீரர்கள் அரை சதத்திற்கு மேல் செல்ல முடியும் என்பும்போது ஒருவர் அதில் சதம் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் 300 ரன்கள் என்பது சாதாரணமாக வரக்கூடியதுதான்.

இப்போது பிரச்சனையென்னவெனில் இந்திய பேட்டிங் தோல்வி அடையும்போது 4 பந்து வீச்சாளர்களை வைத்திருந்தால் அது தோல்வியில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது.

எனவே தோனிக்கு மிகப்பெரிய கஷ்டம் என்னவெனில் ஸ்ரீசாந்த், நெஹ்ரா கட்டாயம் ஃபார்முக்கு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் பேட்ஸ்மெனில் ஒருவரை தியாகம் செய்யவேண்டி வரும் அப்போது யூசுப் பத்தானின் இடம் பற்போகும், இதனால் இந்திய அணிக்கு பின் களத்தில் உள்ள ஒரு பெரிய அதிரடி வாய்ப்பு பற்போகும்.

தோனி என்ன செய்கிறார் என்பதைக் காண ஆர்வமாக இருக்கிறது. அடுத்த போட்டி வரை காத்திருப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்