எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்த இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை அரையிறுதி கிரிக்கெட் நேற்று மொஹாலியில் இந்திய ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு ஏற்ப இந்திய வெற்றியில் முடிவடைந்தது.
PTI Photo
FILE
பாகிஸ்தான் சவால்களை ஏற்படுத்த தோனி அதனை திறம்பட எதிர்கொண்டு அழுத்தத்தை எதிரணியினர் மீது திருப்பினார். அதற்காக அவர் செய்த உத்திகள் அலாதியானது. அனைத்து விக்கெட்டுகளுமே திருப்பு முனைதான் என்றாலும் சில இடங்களில் திருப்பு முனைகளை தோனி உருவாக்கினார் என்றால் அது மிகையாகாது.
முதலில் நாம் அடிக்கடி கூறும் சேவாக் காரணி. உமர் குல் என்பவர் உண்மையில் ஒரு அச்சுறுத்தும் பந்து வீச்சாளர் என்பதில் இருவேறு கருத்தில்லை. அவரை பிளே என்றவுடன் 5 பவுண்டரிகளை அடித்து சேவாக் நிலைகுலையச் செய்தார். அதன் பிறகு அவர் எழுந்திருக்கவேயில்லை. இந்தத் துவக்கம் எதிர்பார்த்ததுதான் என்றாலும் சேவாக் மீண்டும் ஒருமுறை இதனை முக்கியமான போட்டியில் செய்ததால் இதுதான் துவக்க திருப்பு முனையாகும்.
இரண்டாவதாக தோனி எடுத்த ரிஸ்க். பிட்ச் ஸ்பின் எடுக்காது என்று தவறாக நினைத்தோம் என்று தோனி பின்பு ஒப்புக்கொண்டாலும் அஷ்வினுக்குப் பதிலாக நெஹ்ராவை எடுத்து தைரியம் காட்டினார். நெஹ்ரா மீது நம்பிக்கை வைத்தார் தோனி, அது நேற்று பலனளித்தது.
முக்கியமான சில ஓவர்களை இக்கட்டான தருணத்தில் நெஹ்ரா வீசி தோனியை காப்பாற்றினார்.
பாகிஸ்தான் அணியின் துரதிர்ஷ்டம் அந்த அணியின் ஃபீல்டிங், குறிப்பாக கேட்ச். கம்ரன் அக்மல் நியூஸீலாந்துக்கு எதிராக ராஸ் டெய்லருக்கு அடுத்தடுத்து அக்தர் பந்தில் 2 கேட்களை விட்டதால் அன்று பாகிஸ்தான் தோற்றது. நேற்று சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தடுத்து அவர் 27, 45, 70, 81 ஆகிய ரன்களில் இருந்தபோது எளிதான கேட்ச்களை கோட்டை விட்டது. இதனால்தான் இந்தியா 260 ரன்களை எட்ட முடிந்தது.
webdunia photo
FILE
நேற்றைய மற்றொரு முக்கிய அம்சம் இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் துல்லியமாக ஒழுக்கமாக இருந்தது. 38-வது ஓவர் வரை உதிரிகள் வகையில் ரன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அணியின் ஃபீல்டிங் அசாதாரணமானது என்று கூற முடியாவிட்டாலும் தேவைக்கேற்ப ஃபீல்டிங் இருந்தது. குறிப்பாக யுவ்ராஜ், ரெய்னா, கோலி நன்றாக ஃபீல்ட் செய்தனர்.
பந்து வீச்சு மாற்றங்களை தோனி அபாரமாகச் செய்தார். கம்ரன் அக்மலும், ஹபீஸும் அபாரமாக விளையாடிய வேளையில் ஜாகீர் கானை முனை மாற்றிக் கொண்டு வந்தது தோனியின் சாதுரியமான முடிவு அதில் அவர் ஆட்டமிழந்தார். அதேபோல்தான் ஹஃபீஸ் அபாரமாக விளையாடி வந்தபோது முனாஃப் படேலை தொடர்ந்து வீசச் செய்தார். அவரும் டைட்டாக வீசி நெருக்கடி கொடுத்து ஹஃபீஸை வீழ்த்தினார்.
அதே போல் யுவ்ராஜ் சிங், ஆசாத், ஷபீக்கையும், யூனிஸ் கானையும் வீழ்த்தியது இந்தியாவை வெற்றிப்பாதைக்குத் திருப்பியது.
webdunia photo
FILE
அதன் பிறகு உமர் அக்மல் அபாரமான முறையில் அபாயகரமாக யுவ்ராஜ் சிங்கை விளாசத் தொடங்கியவுடன் ஒரு முனையில் குளிர்பான இடைவேளைக்குப் பிறகு ஹர்பஜனைக் கொண்டு வந்தார். ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய ஹர்பஜன் ஒரு பந்தை நேராக வேகமாக வீச அது அக்மலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது பவுல்டு ஆனார். இது ஒரு முக்கியமான திருப்பு முனையாகும்.
அதேபோல் இறுதி கட்ட அதிரடிக்கென்றே பிறப்பெடுத்த அப்துல் ரசாக் பேட் செய்தபோது உடனடியாக முனாஃபை பந்து வீச அழைத்தார் தோனி. அவர் அபாரமான லெக் கட்டரில் ரசாக்கின் ஆஃப் ஸ்டம்பை தொந்தரவு செய்தார். கடைசி திருப்பம் அஃப்ரீடி களமிறங்கி ஓரளவுக்கு ஆட்டத்தை திருப்பினார். ஓவர் ஒன்றுக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர் 7 முதல் 8 ரன்களை அடித்து வந்தனர். அப்போது ஹர்பஜன் சிங்கை மீண்டும் அழைத்தார் தோனி அவரும் எதிர்பாராத ஃபுல்டாஸை போட்டார் அஃப்ரீடி அதனை மைதானத்தை விட்டு அடித்திருக்கவேண்டும், ஆனால் அவர் மேலே கிளப்பி ஆட்டமிழந்தார்.
இந்தத் திருப்பு முனைகளையெல்லாம் விட நேற்றைய பாகிஸ்தான் தோல்விக்கு முழு முதல் காரணமாகத் திகழ்பவர் மிஸ்பா உல் ஹக், இவர் ஒரு முனையில் சிங்கிள் எடுக்காமல் மட்டை போட்டு ரன் விகிதத்தை குறைத்ததால் ஷஃபீக், ரசாக், அஃப்ரீடி ஆகியோர் நெருக்கடியில் ஆட்டமிழந்தனர். நீண்ட நேரம் பவுண்டரியே அவர் அடிக்கவில்லை. சிங்கிளும் எடுக்கவில்லை. இதனால் பின் வரும் வீரர்களுக்கு அழுத்தம் நெருக்கடியாக மாறியது.
webdunia photo
FILE
முதல் 15 ஓவர்களில் இந்தியா 99 ரன்களை எடுக்க 15 ஓவர்களில் பாகிஸ்தான் 70 ரன்களையே எடுக்க முடிந்தது கடைசி 35 ஓவர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே ரன் எண்ணிக்கையைத்தான் எடுத்துள்ளன. இப்படிப் பார்த்தால் பாகிஸ்தான் நேற்று தோற்ற 29 ரன்கள் இடைவெளி முதல் 15 ஓவர்களில் ஏற்பட்ட இடைவெளிதான். இந்த 15 ஓவர்களில் தோனி 4 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பாகிஸ்தான் பேட்ஸ்மென்களை செட்டில் ஆகவிடாமல் செய்தார்.
இதனை உணர்ந்திருந்தால் மிஸ்பா உல் ஹக் இப்படி பிளேடு போட்டிருக்க மாட்டார். எப்போதும் இலக்கைத் துரத்தும்போது முதலில் ஆடிய அணியின் ரன் விகிதத்தைக் காட்டிலும் சற்றே அதிகமாக துரத்தும் அணி வைத்திருக்கவேண்டும். துரத்தும் போது சீராக வெற்றி பெறும் அணிகளின் ஸ்கோர் கார்டை எடுத்துப்பார்த்தால் இது புரியும். உதாரணத்திற்கு 1996 ஆம் ஆண்டிற்கு பிறகான இலங்கை ஸ்கோர் கார்டையும், திராவிட் தலைமையில் இந்தியா தொடர்ந்து 17 ஒரு நாள் போட்டிகளில் துரத்தி வெற்றிபெற்ற ஸ்கோர் கார்டையும் எடுத்துப்பார்க்கலாம்.
எப்போதும் ரசாக்கால் கடைசி 10 ஓவர்களில் 90 ரன்களை விளாச முடியாது. அதிசயம் எப்போதாவதுதான் நிகழும், எப்போதும் நிகழ்ந்தால் அது அதிசயமன்று. இது போன்ற அற்புதம் நிகழும் என்று நேற்று மிஸ்பா நம்பியிருப்பார் போலிருக்கிறது.
ஆனால் பாகிஸ்தான் ஏமாற்றமடைய வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத விலக்கப்பட்ட அணியாக களமிறங்கி ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி இலங்கையை வீழ்த்தி, மேற்கிந்திய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெரிய சாதனைதான். அதுவும் அந்த அணிக்கு கிரிக்கெட் அல்லாத மற்றதரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளும்போது.
நேற்று தோனி அஃப்ரீடியை விட தான் ஒரு படி மேலே என்பதை நிரூபித்தார். இம்ரான் கானும் இதைத்தான் முதல் நாள் கூறினார். அஃப்ரீடியைக் காட்டிலும் தோனி சிறந்த அணித் தலைவர் என்று.