ஆஸி.க்கும் காசேதான் கடவுளடா?

புதன், 27 பிப்ரவரி 2008 (17:23 IST)
webdunia photoWD
இந்திய பிரிமியர் லீக் என்ற பணமரம் கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. ஆஸ்ட்ரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் 1.47 மில்லியன் டாலர்கள் விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.தோனி அனைவரையும் விட அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார்.

ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் ஆஸ்ட்ரேலிய வீரர்களிடையே ஒரு முக்கிய பரிமாணத்தை எட்டியுள்ளது. காரணம் உலகின் தலைசிறந்த கேப்டனாகவும், பேட்ஸ்மெனாகவும் ஃபீல்டராகவும் கருதப்படும் ரிக்கி பாண்டிங் வெறும் 4,36,000 டாலர்களுக்கே விலை போயுள்ளார்.

சைமன்ட்ஸ் தான் ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்து கூறுகையில் "நான் கேட்கவில்லை, அவர்களாக எனக்கு கொடுக்க முன்வருவது இது" என்று கூற, ரிக்கி பாண்டிங்கோ மிகவும் பரிதாபமாக,"நான் ஏமாற்றமடைந்துள்ளேன், நான் இன்னமும் சிறிது விலை போவேன் என்றுதான் நினைத்தேன், இந்திய மக்கள் என்னை நன்றாகவே வரவேற்றுள்ளனர், நான் அங்கு செல்லும்போதெல்லாம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இருப்பினும் இந்த குறைந்த தொகை ஏமாற்றமே அளிக்கிறது. எனது மனத்தில் கடந்த 2 நாட்களாக இது பற்றிய எண்ணங்கள் அதிகம் ஆக்ரமித்துள்ளத” என்று கூறியுள்ள பாண்டிங்,

இன்னமும் மேலே போய் சற்றும் எதிர்பாராதவிதமாக, ஹர்பஜன் விவகாரமும் இதற்கு காரணமாயிருக்கலாம் என்றும், இன்னமும் மேலே போய் "இதில் -சைமன்ட்சும்தானே ஈடுபட்டார்" என்று புலம்பித் தள்ளியுள்ளார்.

பாண்டிங்கின் இந்த புலம்பலுக்கு காரணம் ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு வீரர்களான கேமரூன் ஒயிட் 5,44,000 டாலர்களுக்கும், டெஸ்ட், ஒரு நாள் எதிலும் இன்னமும் ஆடாத டேவிட் ஹஸ்ஸி 7,38,000 டாலர்களுக்கும் விலை போயுள்ளனர் என்பதே. பாண்டிங் என்னதான் விளையாட்டுக்கு கூறுகிறேன் என்று அந்த நாட்டு ஊடகங்களை ஏமாற்றினாலும், பணம் படுத்தும் பாடு நாம் அறியாததா என்ன?

பாண்டிங் மேலும் இது பற்றி தன் ஓய்வறை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கையில், இந்த ஐ.பி.எல். பண விவகாரம் அணியினரிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது மட்டுமல்லாது, சைமன்ட்ஸ் ஒரே நாளில் கோடிகளுக்கு சொந்தமானது தனக்கும் ஹெய்டனுக்கும் மட்டும்தான் பொறாமையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் நாங்கள் இருவரும் அந்த மாதிரி நபர்கள் இல்லை என்று வேறு கூறியுள்ளார்.

webdunia photoWD
உளவியலின் அடிப்படைகளின் படி, நாம் எதனை வலிந்து மறுக்கிறோமோ, அந்த சிந்தனை அல்லது எண்ணம் நம் ஆழ் மனதில் நிலைபெற்ற ஒன்றே. அழிக்க முடியாத ஒன்றே. பாண்டிங் தனக்கு இல்லை என்று கூறும் பொறாமையும், அவ்வாறு அவர் ஆழ் மனதில் நிலையாக குடிகொண்டிருக்கும் ஒரு விஷயமே.

இவர் நிலை இப்படியென்றால், மைக்கேல் கிளார்க், மிட்சல் ஜான்சன் போன்றோர் தங்களுக்கு ஐ.பி.எல்.-ஐ விட நாடுதான் முக்கியம் என்று கூறி ஒதுங்கிவிட்டனர். ஒரே ஓய்வறையில் நாட்டிற்காக அர்ப்பணிக்கும் இரு வீரர்கள், புதிதாக அணிக்கு வரும் வீரர்கள், சைமன்ட்ஸ் என்ற கோடீஸ்வரர், பொறாமை கொள்ளலாம் என்று அதற்கான சாத்தியங்களை சூசகமாக் தெரிவித்த கேப்டன் பாண்டிங் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோர் இருந்து கொண்டு எங்களிடையே வேற்றுமை இல்லை என்று கூறினால், இது காதில் பூ சுற்றும் வேலைதான்.

webdunia photoWD
ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆசையினால் பாகிஸ்தான் பயணத்திற்கு தான் வர மாட்டேன் என்று போலியான பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளது, 'பொறாமை பாண்டிங்கிற்கு' தெரிந்ததனால்தான் சைமன்ட்ஸ் பயணம் மேற்கொள்வது அவசியம் என்று மிரட்டாத குறையாக கூறினார். உடனே சைமன்ட்சும் அந்தர் பல்டி அடித்து பாக். பயணம் பற்றி யோசனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இப்போது ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சரியாக ஆடாவிட்டாலும் கூட அவரை ஒன்றும் செய்யமுடியாது, ஏனெனில் நான் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்து விட்டு ஐ.பி.எல்.இல் முழு நேர கிரிக்கெட் வீரராக ஆடும் முடிவை எடுக்கலாம்.

இந்த முடிவை ஏற்காத ஆஸி. வாரியம் அவரை தொடர்ந்து அணியில் வைத்திருந்தால், ஐ.பி.எல் வேண்டாம் என்று கூறிய மைக்கேல் கிளார்க், மிட்சல் ஜான்சன் ஆகியோரது அதிருப்தியையும் சந்திக்க வேண்டி வரும். மேலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை ஐ.பி.எல்-ல் அதிக தொகைகளை பெற்று ஏலம் போவதற்கான ஒரு நுழைவாயிலாகவும் வீரர்கள் பயன்படுத்த தொடங்கலாம். இதனால் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேடிடலாம், இவையெல்லாம் அணியில் இருக்கும் வீரகளிடம் பெருமளவு விரோதங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்திய வீரர்களிடையே இது ஏற்பட வாய்ப்பில்லை, ஏனெனில் பிரபலமடைந்த அனைத்து வீரர்களும் பெரும் விளம்பர வருவாய் திடுக்கிட வைப்பது என்பது நாம் அறிந்ததே.

ஆஸ்ட்ரேலிய, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து போன்ற அணிகளுக்கே இது ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா ஏற்கனவே ஐ.பி.எல். பண மழையால் வீரர்களிடையெ விரிசல் ஏற்படுவதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளதாக ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாய் விற்ற காசு குரைக்குமா என்று ஒரு பழமொழி உண்டு. கேள்வி கேட்க வேண்டாம், ஆஸ்ட்ரேலிய ஓய்வறையில் நாய் விற்ற காசு குரைக்கத் தொடங்கியுள்ளது.

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது நம் நாட்டுப் பழமொழி, ஆஸ்ட்ரேலிய வீரர்கள் ஒன்றும் பிணம் அல்லவே, அவர்கள் வாயைத் திறக்காமல் இருந்தால்தான் பிணம்.

இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தனது "ஏதென்சு நகர டைமன்" என்ற நாடகத்தில் தங்கம் பற்றி கூறிய ஒரு பகுதி இப்போது ஐ.பி.எல்.க்கும் பொருந்தும்:

சீரும், செல்வமுமாக, தாராளமனத்துடன் வாழ்ந்த `டைமன்' மனிதர்களின் நயவஞ்சகத்தாலும், நன்றிகெட்ட தன்மையிலும், நிலைமை சீரழிய அந்தச் சமூகத்தின் மீதும், மனித குலத்தின் பணம், பொன் மீதான மயக்கத்தையும் வசைமாறி பொழியும் அவனின் உள் - மன தனி மொழியை ஷேக்ஸ்பியர் கீழ்கண்டவாறு வசை பாடித் தீர்த்துள்ளார்:

"தங்கம் மஞ்சள் நிறமாகப் பளபளக்கும் மதிப்பிற்குரிய தங்கம்!... இதோ இந்தத் தங்கம் கறுப்பை வெளுப்பாக்கும்! கெட்டதை நல்லதாக்கும், தவற்றைச் சரியாக்கும், கீழ்த்தரத்தை மகோன்தைமாக்கும், முதுமையை இனிமையாக்கும், கோழையை வீரனாக மாற்றும், உடல்பருத்த மனிதர்களின் திண்டு திமாசுகளைக் கூட தலைக்கடியிலிருந்து உருவிப் பிடுங்கிவிடும்! இதோ இந்த மஞ்சள் நிற அடிமை மதங்களை பின்னிப் பிணைக்கவும் செய்யும், பெயர்த்துப் பிடுங்கவும் செய்யும், மாபாவிகளையும் மன்னித்து ஆசிர்வதிக்கும்...

பாழாய்ப்போன உலகமே! மனித குலத்தின் பொது மகளான பொன்னே! தேசங்களக்குள்ளே பேதத்தையும், குரோதத்தையும், உண்டாக்குகிற விலைமகள் நீ...!"

webdunia photoWD
மேற்கண்ட ஷேக்ஸ்பியர் நாயகன் டைமனின் ஆவேசத்தை நாம் ரிக்கி பாண்டிங்கிற்கு எடுத்துக் கொடுப்போம். ஆம், சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 20 ஆயிரம் நெருங்கும் உலகின் தலை சிறந்த வீரராக கருதப்படும் ரிக்கி பாண்டிங், பெரும்பாலும் கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக சமீபமாக பிரபலமடைந்து வரும் சைமன்ட்சிடம் ஏலத்தொகையில் தோற்றுள்ளார்.

சைமண்ட்ஸ் மட்டும் என்ன விதிவிலக்கா? இந்திய ரசிகர்களை நிறவெறியாளர்கள் என்று முத்திரை குத்தியவர்தானே இவர். ஆனால் இந்தியப் பணம் தற்போது அவருக்கு இனிக்கிறது போலும். ஆம். பணத்திற்கு ஏது நிறம்.

என்ன டைமனின் கூற்று போல் ஐ.பி.எல் "கறுப்பையும் வெளுப்பாக்குமோ" (சிலேடைக்கு நாம் பொறுப்பல்ல)