புள்ளிவிவரங்களின் படி ஆஸ்ட்ரேலியாவின் பிரெட் லீ உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளராகத் திகழ்கிறார்.
இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்ட்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் பிரெட் லீ, இதுவரை 10 உலகக் கோப்பை போட்டிகளில் 22 விக்கெட்டுகளை விக்கெட் ஒன்றுக்கு 17.91 என்ற சராசரியின் கீழ் வீழ்த்தியுள்ளார்.
ஒவ்வொரு 22 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் பிரெட் லீ. அதாவது ஒவ்வொரு 4-வது ஓவரிலும் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரும் வைத்திராத உலகக் கோப்பை கிரிக்கெட் சாதனையாகும்.
கிளென் மெக்ரா, டெனிஸ் லில்லிக்குப் பிறகு ஆஸ்ட்ரேலியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் பிரட் லீ, லில்லி போன்று அல்லாமல் பிற்காலத்தில் வேகத்தைக் குறைப்பவர் அல்ல.
இன்றும் அவர் மணிக்கு 150கி.மீ. அல்லது அதற்கு மேலும் வீசக்கூடிய திறமை உள்ளவர். இரு வடிவ கிரிக்கெட் ஆட்டங்களிலும் சேர்த்து 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரெட் லீ இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் மற்ற அணியின் துவக்க வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இவரும் ஷான் டெய்ட் என்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளரும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சரியக வீசிவிட்டால் ஆஸ்ட்ரேலியாவின் வெற்றி வாய்ப்புகள் எப்போதும் அதிகரிக்கும் என்பது மிகையல்ல.
webdunia photo
FILE
இங்கிலாந்துடன் 34 ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகளும், இந்தியாவுக்கு எதிராக 29 போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும், நியூசீலாந்துடன் 27 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானுக்கு எதிராக 20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 போட்டிகளில் 40 விக்கெட்டுகளையும், இலங்கைக்கு எதிராக 19 போட்டிகளில் 21 விக்கெட்டுகளையும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 21 போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
எனவே முன்னணி அணிகளுக்கு எதிராக சிறப்பாக வீசக்கூடியவர் பிரெட் லீ என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரிக்கி பாண்டிங் தலைமையில் பிரட் லீ 133 போட்டிகளில் 242 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே ரிக்கி பாண்டிங் இவரை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்று தெரிகிறது.
மேலும் பகலிரவு ஆட்டங்களில் இவர் அபாயகரமான பந்து வீச்சாளர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 114 ஒருதின பகலிரவு போட்டிகளில் இவர் 197 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.
2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்ற 138 ஒருநாள் போட்டிகளில் 268 விக்கெட்டுகளை 20 என்ற சராசரியுடன் பெற்று அபாயகரமாக இருந்திருக்கிறார். மாறாக இதே காலக்கட்டத்தில் ஆஸ்ட்ரேலியா தோற்ற 42 ஆட்டங்களில் பிரெட் லீ 51 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். எனவே ஏதோ ஒரு விதத்தில் ஆஸ்ட்ரேலியா தோற்பது இவர் பந்து வீச்சு சோபிக்காமல் போவதாலேயே என்று தெரிகிறது.
எனவே இந்த உலகக் கோப்பையில் பிரெட் லீ ஏதோ முடிந்து போன பந்து வீச்சாளர் என்று எதிரணியினர் நினைத்துக் கொண்டு அதி-தன்னம்பிக்கை கொண்டிருந்தால் அது அந்த அணி தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்குச் சமமாகும்.